‘மிகப் பெரிய வெற்றியாக நான் நினைக்கவில்லை’ - கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா பகிர்வு

செஸ் தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்!
‘மிகப் பெரிய வெற்றியாக நான் நினைக்கவில்லை’ - கார்ல்சனை வீழ்த்திய  பிரக்ஞானந்தா பகிர்வு
Updated on
2 min read

இந்திய இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, நார்வே செஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் உலக நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே தொடரில் கார்ல்சனை முதல் முறையாக கிளாசிக்கல் செஸ்ஸில் தோற்கடித்திருந்த பிரக்ஞானந்தா, தற்போது மீண்டும் அதையே சாதித்துள்ளார். கடும் போட்டிகளுக்குப் பிறகு 62-வது மூவில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். கார்ல்சன் போட்டியிலிருந்து தோல்வியை ஒப்புக் கொண்டு விலகினார்.

நார்வேயில் நடைபெறும் தொடரில் கார்ல்சன் அரிதாக கிளாசிக்கல் போட்டிகளில் பங்கேற்கும் நிலையில், இந்த வெற்றி இந்திய செஸ் உலகிற்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. கடந்த ஆண்டில் குகேஷ் தொம்மராஜு கூட கார்ல்சனை கிளாசிக்கல் செஸ்ஸில் முதன்முறையாக தோற்கடித்திருந்தார்.

ஆனால் தனது வெற்றியை பெரிதாக எடுத்துக்கொள்ள மறுத்த பிரக்ஞானந்தா, “நேர்மையாகச் சொன்னால் இது மிகப் பெரிய வெற்றி என்று நான் நினைக்கவில்லை. கடைசியில் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது,” என்று போட்டிக்குப் பிறகு இந்திய ஊடகங்களிடம் தெரிவித்தார். கார்ல்சனை வெல்வது மட்டுமல்லாமல், முழுப் போட்டியையும் ஆதிக்கத்துடன் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் கூறியுள்ளார் பிரக்ஞானந்தா.

பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளர் வைபவ் சூரி, “கார்ல்சனை வெல்வது சாதாரண விஷயம் அல்ல. மேக்னஸ் என்றால் மேக்னஸ்தான்.. கார்ல்சனுக்கு எதிராக அதிகமான தயாரிப்புகள் தேவைப்படுவதாகவும், அவர் அரிதாக கிளாசிக்கல் போட்டிகளில் விளையாடுவதால் தொடக்கத்தில் எந்த அதிரடி மூவ்-ஐ தேர்வு செய்வார் என்பதை கணிப்பதே கடினம்.” என்றார்.

நேற்றைய போட்டியில் முதல் நகர்த்தலுக்கே இருவரும் தலா 25 விநாடிகள் எடுத்துக் கொண்டனர். 1.e4 என்று செஸ் உலகில் அழைக்கப்படும் அட்டாக்கிங் முதல் மூவைச் செய்தார் பிரக்ஞா. அதாவது தன் ராஜாவின் முன்னால் உள்ள சிப்பாயை இரண்டு கட்டங்கள் முன்னே கொண்டு நிறுத்தினார். இதற்கு வழக்கமாக எதிர் வீரர் மேற்கொள்ளும் பாதுகாப்பு அரண் தனது வலது புறத்திலிருந்து மூன்றாவதாக இருக்கும் பிஷப்புக்கு முன்னால் உள்ள பான் அல்லது சிப்பாயை இரண்டு கட்டங்கள் முன்னே நகர்த்துவது.

இந்த ‘சிசிலியன் டிபன்ஸ்’ மேற்கொண்டார் கார்ல்சன். பிரக்ஞானந்தா விடவில்லை. தன் வலப்புற யானைக்கு முன்னால் உள்ள சிப்பாயை இரண்டு கட்டங்கள் முன்னே நகர்த்தினார் . ஆட்டத்தின் அந்த நிலையில் வெள்ளைக்காய்களில் ஆடும் பிரக்ஞாவுக்கு 18 நல்ல மூவ்கள் இருந்தன. ஆனாலும் அவர் யானைக்கு முன்னால் உள்ள பான் - ஐ 2 கட்டங்கள் நகர்த்தியது தனக்கு ஆச்சரியமளித்ததாக கார்ல்சன் தெரிவித்தார்:

“அந்த நிலையில் வெள்ளைப் பக்கத்திற்கு குறைந்தது 18 நல்ல நகர்வுகள் இருந்தன. ஆனாலும் நான் ஆச்சரியப்பட்டுவிட்டேன்,” ஆட்டம் மத்திய கட்டத்தை எட்டியபோது கடுமையான போராட்டமாக மாறியது. பிறகு கார்ல்சன் ஒரு கட்டத்தில் தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆட்டத்தை விட்டு விலகிய பிறகு கார்ல்சனின் ஏமாற்றம் தெளிவாகத் தெரிந்தது; இந்த மாபெரும் வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தா தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

‘மிகப் பெரிய வெற்றியாக நான் நினைக்கவில்லை’ - கார்ல்சனை வீழ்த்திய  பிரக்ஞானந்தா பகிர்வு
கெயில் சாதனை உடைப்பு; சச்சின் பாராட்டு - புதிய ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சூர்யவன்ஷி!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in