

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் டெஸ்ட் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, 2026 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் தோல்விகளுக்காக வீரர்களுக்கு அபராதம் விதித்ததாக கூறப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த முடிவு வீரர்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக அவர்கள்மீது கூடுதல் அழுத்தத்தை உருவாக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் இதுகுறித்து பேசிய கவாஜா, “T20 உலகக்கோப்பைக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். ஆரம்பத்தில் அதை நம்பவே முடியவில்லை.
உண்மையிலேயே சிரிப்புதான் வந்தது. ஒரு உயர்தர விளையாட்டு அமைப்பு தோல்விக்காக வீரர்களை அபராதம் விதிப்பது எப்படி நல்ல யோசனையாக இருக்கும்? உலகின் எந்த உயர்தர விளையாட்டு அணியும் போட்டிகளில் தோல்வியடைந்ததற்காக வீரர்களுக்கு அபராதம் விதிப்பதில்லை. அவர்கள் யாரும் வேண்டுமென்றே தோற்பதற்காக ஆடிப் போட்டிகளை இழக்கவில்லை.
இப்படி செய்வதால் அவர்கள் அடுத்த முறை எப்படி சிறப்பாக விளையாடுவார்கள்? இதனால் வீரர்களுக்கு தேவையற்ற மனஅழுத்தம் மற்றும் அழுத்தம் மட்டுமே அதிகரிக்கும். பாகிஸ்தான் வீரர்கள் ஏற்கனவே மிகுந்த அழுத்தத்துடனேயே விளையாடுகிறார்கள். பாகிஸ்தானில் ஒவ்வொரு போட்டியையும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கூர்ந்து கவனித்து பார்க்கிறார்கள்.
அணித் தேர்வுகள் கூட பலமுறை சர்ச்சையாக இருந்திருக்கின்றன. இதற்கிடையில் அபராதம் விதிப்பது அவர்களுக்கு மேலும் மனக்கஷ்டத்தையே ஏற்படுத்தும்,” என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் உலகக்கோப்பை பயணம் ஆரம்பத்திலிருந்தே சர்ச்சைகள் மயமாக இருந்தது. ஆரம்பத்தில் அரசாங்கத்தின் சில முடிவுகள் காரணமாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுமா என்ற கேள்வி எழுந்தது. பின்னர் நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகளை வென்ற பாகிஸ்தான், கொழும்பில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அதன்பின் நமீபியாவை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் எட்டுக்கு முன்னேறியிருந்தாலும், இங்கிலாந்திடம் இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி மற்றும் இலங்கைக்கு எதிராக 147 ரன்களுக்குள் அவர்களைத் தடுக்க முடியாதது போன்ற காரணங்களால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் இழந்தது.
இந்த தோல்விகளுக்குப் பிறகு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அணியின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ள அபராத முடிவு புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.