

தரம்சாலா: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் தரம்சாலாவில் நடைபெற்ற தகுதி சுற்று 1 ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட் செய்த ஆர்சிபி 5 விக்கெட்கள் இழப்புக்கு 254 ரன்கள் குவித்து மிரட்டியது. கேப்டன் ரஜத் பட்டிதார் 33 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் விளாசினார்.
255 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ராகுல் டெவாட்டியா 68, ஜாஸ்பட்லர் 29, சாய் சுதர்சன் 14 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் ஷுப்மன் கில் உள்ளிட்ட மற்ற எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த போதிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு மேலும் ஒரு வாய்ப்பு உள்ளது. அந்த அணி தகுதி சுற்று 2-ல் விளையாட உள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது: தகுதி சுற்று ஆட்டம் எங்களுக்கு அற்புதமான ஆட்டமாக அமைந்தது. பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்திய விதம், ரன் குவிக்க வேண்டும் என்ற உறுதியோடு விளையாடியது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. இது ஒரு தெளிவான திட்டமிடலாக இல்லா விட்டாலும், நாங்கள் அதற்கு தயாராகவே இருந்தோம்.
எதிரணியை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை எங்களது உடல் மொழியிலேயே காட்டினோம். தாக்குதல் ஆட்ட மனநிலையிலேயே விளையாடினோம். ஆடுகளத்தின் தன்மை எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக 8-10 பந்துகளை நிதானமாக எதிர்கொள்வேன். அதன் பிறகே, ஆட்டத்தை எப்படி எதிர்கொள்வது என்பதில் எனக்கு ஒரு தெளிவான சிந்தனை கிடைக்கும். என் விக்கெட்டைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.
பந்துவீச்சாளருக்கு அழுத்தத்தை ஏற்படுத்தவே நான் முயற்சி செய்கிறேன். ஆடுகளத்தின் தன்மை பேட் செய்வதற்கு அவ்வளவு எளிதாக இல்லை, பந்துகள் வெவ்வேறு உயரங்களில் எழும்பின. குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த தொடரில் விளையாடிய விதத்தை வைத்து, பவர்பிளேயிலேயே அவர்களுடைய முக்கியமான மூன்று பேட்டர்களை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம், அது நல்ல பலனைத் தந்தது. இவ்வாறு ரஜத் பட்டிதார் கூறினார்.