

பிரான்ஸ் அணி வீரர் கிலியன் எம்பாப்பே
நியூ ஜெர்சி: இலக்கு மெஸ்ஸியின் கோல் சாதனை அல்ல; உலகக் கோப்பை பட்டம் என்று பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே தெரிவித்துள்ளார்.
ஃபிபா உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல் பதிவு செய்தவர் என்ற சாதனையை அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி படைத்துள்ளார். அந்த பட்டியலில் அவரை நெருக்கமாக பின் தொடர்ந்து வருகிறார் எம்பாப்பே. மெஸ்ஸி 19 கோல்கள் உடன் முதலிடத்தில் உள்ளார். எம்பாப்பே 18 கோல்கள் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டத்தில் ஸ்வீடன் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிரான்ஸ். இதன் மூலம் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு அந்த அணி முன்னேறியுள்ளது. இந்த ஆட்டத்தில் 2 கோல்களை பதிவு செய்தார் எம்பாப்பே.
“நான் ஏற்கெனவே சொன்னது போல எங்கள் இலக்கு இறுதிப் போட்டியில் விளையாடுவதுதான். நாங்கள் வெற்றி பெற முயற்சிக்கிறோம். ஒவ்வொரு ஆட்டமாக அணுகி வருகிறோம். அதிக கோல் பதிவு செய்யும் வீரர் நிச்சயமாக தரவரிசையின் உச்சத்தில் இருப்பார். நான் சொல்வது ஒன்றும் புதிது அல்ல.
ஆனால், லியோ (மெஸ்ஸி) அதிக கோல்கள் பதிவு செய்வார் என நம்புகிறேன். அதனால் அதில் நான் அதிகம் கவனம் செலுத்தவில்லை. எனது கவனம் நாங்கள் விளையாடும் எதிரணியின் மீது உள்ளது. மற்றும் எந்த அளவுக்கு எங்கள் இலக்கை நோக்கி நாங்கள் நெருங்குகிறோம் என்பதில் உள்ளது” என்று 27 வயதான எம்பாப்பே கூறியுள்ளார்.