

பிரான்ஸ் அணி வீரர்கள்
யூரோ 2024 கால்பந்து தொடர் அரையிறுதியில் ஸ்பெயின் அணி பிரான்ஸை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிரான்ஸிற்கு தீரா மனக்காயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் இதனால் இன்று நள்ளிரவு நடைபெறும் ஃபிபா உலகக் கோப்பை அரையிறுதியில் ஸ்பெயினை வெளியேற்றி பழிதீர்ப்போம் என்று பிரான்ஸ் அணியின் மிட் ஃபீல்டர் ஜயீரே எமரி சபதம் பூண்டுள்ளார்.
யூரோ 2024 அரையிறுதியில் 9-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ராண்டால் கோலோ முவானி மூலம் கோல் அடித்து முன்னிலை பெற்றாலும் லமின் யமால் 21-வது நிமிடத்திலும் டேனி ஆல்மோ 25-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து அடித்த கோல்களினால் நிலைகுலைந்த பிரான்ஸ், அதன் பிறகு எழும்ப முடியவில்லை.
பிரான்ஸ் அணி 2000 மற்றும் 2006-ல் ஸ்பெயினை நாக் அவுட் ஆட்டங்களில் வென்று வெளியேற்றியுள்ளது. ஸ்பெயின் இதற்குப் பதிலடியாக யூரோ 2012 மற்றும் 2024-ல் பிரான்ஸை வெளியேற்றியது. எனவே பிரான்ஸ்-ஸ்பெயின் போட்டி என்றால் கால்பந்தாட்டத்தின் உச்சம் என்றே கூறலாம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முனிச்சில் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் லூயிஸ் டெ லா ஃபுவென்டே வழிநடத்திய ஸ்பெயின் அணி தகுதியான சாம்பியனாக உயர்ந்தது. ஆனால் இம்முறை புதுப்பொலிவுடன் எழுச்சி கண்டுள்ள பிரான்ஸ் அணி, அதிரடியான தாக்குதல் ஆட்டத்தின் மூலம் அரையிறுதி வரை முன்னேறி, பழிதீர்க்கும் உறுதியுடன் களமிறங்குகிறது.
பிரான்சின் இளம் நட்சத்திரம் வாரன் ஜயீரே-எமெரி கூறுகையில், “இப்போது எங்களிடம் முற்றிலும் மாறுபட்ட அணி உள்ளது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் தயாராக இருக்கிறோம். ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் ஏற்பட்ட தோல்விக்குப் பழிதீர்த்து, ஸ்பெயினை வீழ்த்த விரும்புகிறோம். இது உலகக் கோப்பை அரையிறுதி என்பதால் முழு கவனத்துடனும் உறுதியுடனும் விளையாட வேண்டும். இந்த போட்டியில் எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என்றார்.
2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில் மாற்று வீரராக மட்டுமே இருந்த எமெரி, கடந்த புதன்கிழமை மொராக்கோவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் தனது முதல் முக்கிய சர்வதேச தொடரில் களமிறங்கினார்.
இதற்கிடையில், முன்னாள் ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஹோய், ‘பிரான்ஸ் அணியில் பிரெஞ்சு வீரர்களே இல்லை’ என்று கூறிய கருத்து இனவெறி குற்றச்சாட்டுகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த எமெரி, அவர் கூறியதை முழுமையாகப் படிக்கவில்லை என்று கூறியதுடன், “பிரான்ஸ் அணி பல்வேறு பின்னணி மற்றும் வேர்களைக் கொண்ட வீரர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவே பிரான்ஸின் அடையாளம். நாங்கள் ஒன்றுபட்ட குழுவாக இருக்கிறோம். ஒன்றாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அதுவே எங்களுக்கு முக்கியமானது” என்று பதிலளித்தார்.
அதே நேரத்தில், பிரான்ஸ் தலைமைப் பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ், இந்தப் போட்டியை பழிதீர்க்கும் வாய்ப்பாக பார்க்கவில்லை என்று தெளிவுபடுத்தினார். 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் அரையிறுதி தோல்வியுடன், கடந்த ஆண்டு நேஷன்ஸ் லீக் அரையிறுதியில் ஸ்பெயினிடம் 5-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்தாலும், இந்த உலகக் கோப்பை அரையிறுதி முற்றிலும் புதிய போட்டி என அவர் வலியுறுத்தினார்.
“இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் எதுவும் இல்லை. இது இரு அணிகளின் மனவலிமையை சோதிக்கும் மோதலாக இருக்கும். பழிவாங்கும் எண்ணம் எதுவும் இல்லை; கடந்த காலம் கடந்துவிட்டது. என் முழு கவனமும் நாளைய போட்டியில்தான் உள்ளது. அந்த பழைய தோல்விகள் வீரர்களுக்கு ஊக்கமளித்தால் அது நல்லதே. ஆனால் அவற்றின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடவில்லை என்றாலும், இது உலகக் கோப்பை அரையிறுதி என்பதுதான் மிகப்பெரிய உண்மை” என்று டெஷாம்ப்ஸ் கூறினார்.