ஓய்வு குறித்து கால்பந்தாட்ட வீரர் நெய்மார் சூசகம்!

ஓய்வு குறித்து கால்பந்தாட்ட வீரர் நெய்மார் சூசகம்!
Updated on
1 min read

சென்னை: பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான நெய்மார், நடப்பு ஆண்டின் இறுதியில் ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.

காயம் காரணமாக தொடர்ந்து களமாட முடியாமல் நெய்மார் தவித்து வருகிறார். கிளப் அளவில் பார்சிலோனா, பிஎஸ்ஜி, அல்-ஹிலால் உள்ளிட்ட அணிகளுக்கு விளையாடி உள்ளார். தற்போது மீண்டும் பிரேசிலின் கிளப் அணியான சாண்டோஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2009 முதல் 2013 வரை அந்த அணிக்காக நெய்மார் விளையாடி இருந்தார். கடந்த ஆண்டு அந்த அணியுடன் மீண்டும் இணைந்தார்.

“இப்போதிலிருந்து அடுத்து என்ன நடக்கும் என எனக்கு தெரியாது. அடுத்த ஆண்டு குறித்தும் எனக்கு தெரியாது. டிசம்பர் மாதத்தில் ஓய்வு குறித்து முடிவு செய்ய உள்ளேன். இப்போது எனது கவனம் நூறு சதவீத உடற்திறனை எட்டுவதில் உண்டு.

இந்த ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டு. அது சாண்டோஸ் அணிக்கு மட்டுமல்ல பிரேசில் தேசிய அணிக்கும் முக்கியமானதாக அமைந்துள்ளது. எனக்கும் அப்படித்தான். ஏனெனில், இது உலகக் கோப்பை தொடர் நடைபெறும் ஆண்டாக உள்ளது. இது பெரிய சவாலாக இருக்கும்” என நெய்மார் தெரிவித்துள்ளார்.

பிரேசில் அணிக்காக மொத்தம் 79 கோல்களை நெய்மார் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் சர்வதேச அளவில் பிரேசிலுக்காக அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். 34 வயதான நெய்மார், கடந்த 2010-ல் சர்வதேச அளவில் அறிமுகமானார். பிரேசிலை சேர்ந்த முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே, 77 கோல்களை பதிவு செய்துள்ளார்.

ஓய்வு குறித்து கால்பந்தாட்ட வீரர் நெய்மார் சூசகம்!
சென்னை பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக தீர்மானம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in