

வான்கூவர்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கனடாவின் வான்கூவர் நகரில் நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து - அல்ஜீரியா அணிகள் மோதின.
ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் வீரர் மன்சாம்பி, அல்ஜீரிய அணியின் டிஃபென்ஸை கடந்து பந்தை வேகமாக கடத்திச் சென்றார். பெனால்டி பாக்ஸிற்குள் நுழைந்த அவர், பந்து களத்தை விட்டு வெளியேறாமல் தடுத்து, 6 அடி தூர பாக்ஸிற்குள் இருந்த எம்போலோ தட்டிவிட அவர், அதை கோல் வலைக்குள் திணித்தார். இதனால் சுவிட்சர்லாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.
2-வது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் 46-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி 2-வது கோலை அடித்தது. அல்ஜீரிய தற்காப்பு வீரர்கள் பந்தை சரியாக கிளியர் செய்யத் தவறிய நிலையில் பந்து நேராக சுவிட்சர்லாந்து அணியின் வீரர் எண்டோயேவிடம் வந்தது. பாக்ஸின் விளிம்பு பகுதியில் பந்தைக் கட்டுப்படுத்திய எண்டோயே மிக லாவகமாக கோல் வலைக்குள் செலுத்தினார்.
இதனால் சுவிட்சர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. கடைசி வரை போராடியும் அல்ஜீரியா அணியால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முடிவில் சுவிட்சர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது.