

மியாமி: பிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் 3-ம் இடத்துக்கான ஆட்டத்தில் கோல் மழை பொழிந்தது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
23-வது உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 12.30 மணிக்கு மியாமியில் நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இங்கிலாந்து வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கி பிரான்ஸ் அணிக்கு கடும் நெருக்குதலைக் கொடுத்தனர்.
இங்கிலாந்து அணிக்கு 3-வது நிமிடத்திலேயே முதல் கோல் கிடைத்தது. இந்த கோலை இங்கிலாந்து வீரர் டெக்லான் ரைஸ் அடித்து கோல் கணக்கைத் தொடங்கி வைத்தார். இதனால் பிரான்ஸ் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அதிர்ச்சியிலிருந்து பிரான்ஸ் அணி மீள்வதற்குள் 2-வது கோலையும் இங்கிலாந்து அடித்தது. ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் எஸ்ரி கோன்சா அந்த கோலை அடித்தார். இதனால், 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றது.
பிரான்ஸ் அணி வீரர்கள் கோல் கம்பத்தை நோக்கி அடித்த பந்துகளை இங்கிலாந்து கோல்கீப்பர் லாவகமாக தடுத்தார். இந்நிலையில் இங்கிலாந்து வீரர் புகாயோ சாகா 37-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார். இதனால் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து 45+1 நிமிடத்தில் மற்றுமொரு கோல் அடித்து அசத்தினார் புகாயோ சாகா. இதனால் முதல் பாதி முடிவில் இங்கிலாந்து 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. முதல் பாதியிலேயே 4 கோல்களை இங்கிலாந்து வீரர்கள் அடித்ததால் பிரான்ஸ் அணி நிலைகுலைந்து போனது.
இதையடுத்து 2-வது பாதி ஆட்டம் தொடங்கியதும் பிரான்ஸ் அணி வீரர் தீவிர தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கினர். இதன்மூலம் அந்த அணிக்கு பலன் கிடைத்தது. ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே தனது முதல் கோலை பதிவு செய்தார். இதனால் 4-1 என்ற கணக்கில் முன்னிலை குறைந்தது. அதற்கடுத்த 6-வது நிமிடத்திலேயே மற்றொரு கோலை பிரான்ஸ் அடித்தது. பிரான்ஸ் அணிக்காக 54-வது நிமிடத்தில் பிராட்லி பார்கோலா இந்த இரண்டாவது கோலை அடித்தார்.
இந்நிலையில் இந்தப் போட்டியில் தனது 2-வது கோலை அடித்தார் கிலியன் எம்பாப்பே. 66-வது நிமிடத்தில் இந்த கோல் விழுந்தது. இதனால் 3-4 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தாலும், போட்டி பரபரப்பான கட்டத்துக்கு சென்றது. ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் இருந்தபோது பாக்ஸ் பகுதியில் இங்கிலாந்து வீரரை, பிரான்ஸ் வீரர் தட்டிவிட இங்கிலாந்துக்கு பெனல்டி வாய்ப்பு கிடைத்தது. 87-வது நிமிடத்தில் கிடைத்த இந்த பெனல்டி வாய்ப்பை அருமையான கோலாக மாற்றினார் புகாயோ சாகா.
இதன்மூலம் இங்கிலாந்துக்காக ஹாட்ரிக் கோலைப் பதிவு செய்தார் சாகா. இந்தப் போட்டியில் இது அவருக்கு 3-வது கோலாகவும், இந்த உலகக் கோப்பையில் 5-வது கோலாகவும் அமைந்தது. இதனால் இங்கிலாந்து 5-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து காயத்துக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் பிரான்ஸ் மற்றொரு கோலை அடித்தது.
90+4 -வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர்
உஸ்மான் டெம்பலே இந்த கோலை அடித்தார். இதனால் முன்னிலை 5-4 ஆக குறைந்தது. இதனால் ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனாலும், இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி, 6-வது கோலை அடித்தனர்.
90+8-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜுட் பெல்லிங்ஹாம் 6-வது கோலையடித்து இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆட்டம் முடியும் வரை பிரான்ஸ் வீரர்கள் போராடியும் கோலடிக்க முடியவில்லை. இதையடுத்து இங்கிலாந்து 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி 3-வது இடத்தை பிடித்தது.
இங்கிலாந்துக்கு ரூ.279 கோடி பரிசு
வெண்கலம் வென்ற இங்கிலாந்துக்கு அணிக்கு சுமார் ரூ.279 கோடியும், 4-வது இடம் பிடித்த பிரான்ஸ் அணிக்கு சுமார் ரூ.259 கோடியும் பரிசாக கிடைத்துள்ளது.
ஜூட் பெல்லிங்ஹாம் சாதனை
இங்கிலாந்து கால்பந்து அணிக்காக ஓர் உலகக் கோப்பை போட்டியில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையை நடுகள ஆட்டக்காரர் ஜூட் பெல்லிங்ஹாம் பெற்றார். இந்த உலகக் கோப்பை போட்டியில் அவர் 7 கோல்களை அடித்து சாதித்துள்ளார்.
அதேபோல் இங்கிலாந்து வீரர் புகாயோ சாகா, இந்த உலகக் கோப்பை போட்டியின் 300-வது கோலை அடித்தார். மேலும், இங்கிலாந்து அணிக்காக ஹாட்ரிக் கோல்கள் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையையும் புகாயோ சாகா பெற்றார். இதற்கு முன்பு 1966-ல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர் சர் ஜெஃப் ஹர்ஸ்ட் ஹாட்ரிக் கோல்கள் அடித்து சாதனை படைத்திருந்தார்.
உலகக் கோப்பையில் 22 கோல்கள் எம்பாப்பே சாதனை
பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே உலகக் கோப்பை போட்டிகளில் 22 கோல்களை அடித்து அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையைச் செய்துள்ளார். 27 வயதான எம்பாப்பே நேற்றைய போட்டியின்போது 2 கோல்களை அடித்தார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றிலேயே அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 22 கோல்களுடன் அவர் முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் 21 கோல்களுடன் அர்ஜெண்டினாவின் 39 வயதான மெஸ்ஸி உள்ளார்.
மெஸ்ஸியை முந்தினார்
மேலும் இந்த உலகக் கோப்பையில் அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸியை, கிலியன் எம்பாப்பே முந்தியுள்ளார். நேற்று அவர் 2 கோல்களை அடித்து சாதனை புரிந்தார். இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பையில் கோல்டன் பூட் விருது பெறுவதற்கான போட்டியில் கிலியன் எம்பாப்பே முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.
அவர் இதுவரை 10 கோல்கள் அடித்தும், 4 கோல்களை அடிக்க உதவி செய்தும் முதலிடத்தைப் பெற்றுள்ளார். நேற்றைய போட்டிக்கு முன்னதாக மெஸ்ஸி, எம்பாப்பே இருவரும் தலா 8 கோல்கள் அடித்து சமநிலையில் இருந்தனர்.இந்நிலையில் 2 கோல்களை அடித்து மெஸ்ஸியை முந்தியுள்ளார்
எம்பாப்பே. அர்ஜெண்டினா கேப்டன் லயோனல் மெஸ்ஸி தற்போது 8 கோல்களை அடித்தும், 4 கோல்களை அடிக்க உதவி செய்தும் 2-வது இடத்தில் பின்தங்கி உள்ளார். மெஸ்ஸி, கோல்டன் பூட் விருதைப் பெற வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் மேலும் 2 கோல்களை அடிக்கவேண்டும்.
10 கோல்கள்
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின், வெண்கல பதக்கத்துக்கான போட்டி(3-வது இடம்) படு சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று முடிந்தது. இந்தப் போட்டியின்போது மொத்தம் 10 கோல்கள் அடிக்கப்பட்டன.
இறுதிப் போட்டிக்குப் பின் மெஸ்ஸி ஓய்வு?
ஸ்பெயின் அணியுடனான உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்குப் பின்னர் அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி ஓய்வு முடிவை அறிவிப்பார் எனத் தெரிகிறது. இறுதிப் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெஸ்ஸி வெளியிட்ட ஒரு உருக்கமானப் பதிவே இந்த யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
அதில் மெஸ்ஸி கூறும்போது, “எனது சக வீரர்கள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் இந்த தேசிய அணியை ஒரு குடும்பமாக வைத்திருக்க ஒவ்வொரு நாளும் உழைக்கும் அனைவருக்கும் எனது நன்றி. நாளை என்ன நடந்தாலும், இந்த குழு ஏற்கனவே யாராலும் மறக்க முடியாத, அழிக்க முடியாத ஒரு வரலாற்றை எழுதிவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2006 முதல் தற்போது வரையிலான சில புகைப்படங்களையும், அர்ஜெண்டினா அணியினருடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் மெஸ்ஸி பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவுகளே ரசிகர்களிடம் மெஸ்ஸி ஓய்வு தொடர்பான யூகத்துக்கு வழிவகுத்துள்ளது.