

வான்கூவர்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று கனடாவின் வான்கூவரில் உள்ள பிசி பிளேஸ் மைதானத்தில் ‘ஜி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எகிப்து - நியூஸிலாந்து அணிகள் மோதின.
ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் நியூஸிலாந்து வீரர் டின் பெய்ன் கார்னரில் இருந்து அடித்த பந்தை, எகிப்து அணியின் டிஃபெண்டர்கள் யாரும் மார்க் செய்யாமல் கோல் போஸ்ட்டிற்கு மிக அருகில் நின்றுகொண்டிருந்த ஃபின் சர்மான், லாவகமாகத் தலையால் முட்டி கோல் வலைக்குள் செலுத்தினார்.
இதனால் நியூஸிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. 35-வது நிமிடத்தில் எகிப்து வீரர் ஓமர் மர்மூஷ் அடித்த ஃப்ரீ-கிக்கை முகமது சாலா கோலாக மாற்ற முயன்றார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தப் பந்து கோல் போஸ்ட்டை ஒட்டிச் சென்று, வலையின் வெளிப்புறப் பக்கவாட்டில் பட்டது. இதனால் கோல் அடிக்கும் வாய்ப்பு எகிப்துக்குக் கைநழுவியது. முதல் பாதியின் முடிவில் நியூஸிலாந்து 1-0 என முன்னிலையில் இருந்தது.
2-வது பாதி ஆட்டம் தொடங்கியதும் எகிப்து ஆக்ரோஷமாக செயல்பட்டது. 58-வது நிமிடத்தில் எகிப்து வீரர் அத்தியா, பந்தை முகமது ஹானிக்கு பாஸ் செய்தார். பந்தைப் பெற்றுக்கொண்ட ஹானி, நிதானமாக ஒரு டச் செய்து நிலைநிறுத்தி, 6 அடி தூர பாக்ஸின் விளிம்பை நோக்கி ஒரு துல்லியமான கிராஸை அனுப்பினார்.
அதே நேரத்தில் பாக்ஸிற்குள் முஸ்தபா ஜிகோ பாய்ந்து வந்து பந்தைத் தனது தலையால் முட்டி நியூஸிலாந்து கோல்கீப்பரால் தடுக்க முடியாத அளவுக்குப் பலமாக கோல் வலைக்குள் திணித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. 67-வது நிமிடத்தில் 18 அடி தூர பாக்ஸின் வலது கார்னரில் பந்தைப் பெற்றுக்கொண்ட நட்சத்திர வீரர் முகமது சாலா, நியூஸிலாந்து டிஃபெண்டர் மைக்கேல் பாக்ஸாலை சாதுரியமாகத் தடுத்து நிறுத்தி, தனது சக வீரர்கள் பாக்ஸிற்குள் ஓடி வருவதற்காகக் காத்திருந்தார்.
பின்னர் சரியான தருணத்தில், சக வீரர் ஜிகோவுடன் மின்னல் வேகத்தில் ‘ஒன்-டூ’ பாஸ் செய்து, தனக்குக் கிடைத்த மிகக் குறுகிய இடைவெளியைப் பயன்படுத்தி பந்தை கோல் வலைக்குள் தட்டிவிட்டார் முகமது சாலா. இதனால் எகிப்து 2-1 என முன்னிலை பெற்றது. 82-வது நிமிடத்தில் முகமது சாலா கார்னரில் இருந்து அடித்த பந்தை பதிலி வீரராகக் களம் இறங்கிய டிரெசெகுவட் தலையால் முட்டி கோல் அடித்தார்.
இதனால் எகிப்து 3-1 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. நியூஸிலாந்து அணியால் கடைசி வரை போராடிய போதிலும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் எகிப்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பைத் தொடரில் கடந்த 1934 -ம் ஆண்டு அறிமுகமான எகிப்து அணி, 92 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக தற்போதுதான் வெற்றியை பதிவு செய்துள்ளது.
அந்த அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 டிரா, 5 தோல்விகளை பதிவு செய்துள்ளது. நடப்பு தொடரில் எகிப்து அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் அணிக்கு எதிராக 1-1 என்ற கணக்கில் டிரா செய்திருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் எகிப்து அணி 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியது. எனினும் அந்த அணியின் நாக் அவுட் சுற்று வாய்ப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
எகிப்து அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 27-ம் தேதி ஈரானுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தை டிரா செய்தாலே எகிப்து அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. நியூஸிலாந்து அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் ஈரான் அணியுடன் 2-2 என்ற கணக்கில் டிரா செய்திருந்தது. நியூஸிலாந்து அணிக்கும் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு முடிந்துவிடவில்லை.
அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றால் வரலாற்றில் முதல் வெற்றியுடன் நாக் அவுட் சுற்றில் கால்பதிக்கலாம்.