ஜோனாதன் டேவிட் ஹாட்ரிக் கோல் - கனடா அணிக்கு வரலாற்று வெற்றி | FIFA WC 2026

6-0 என்ற கணக்கில் கத்தாரை பந்தாடியது
ஜோனாதன் டேவிட் ஹாட்ரிக் கோல் - கனடா அணிக்கு வரலாற்று வெற்றி | FIFA WC 2026
Updated on
3 min read

வான்கூவர்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கனடாவின் வான்கூவரில் உள்ள பிசி பிளேஸ் மைதானத்தில் நேற்று ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கனடா - கத்தார் அணிகள் மோதின. கனடா அணி ஆட்டத்தின் தொடக்கம் முதலே முழு ஆதிக்கத்தை செலுத்தியது.

16-வது நிமிடத்தில் கனடாவின் ஜோனாதன் டேவிட் அடித்த வலுவான ஷாட்டை கத்தார் கோல்கீப்பர் அபுநாடா தடுத்தார். ஆனால், அவரால் பந்தை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் ஆபத்தான பகுதியில் தவறவிட்டார். அப்போது கத்தார் டிஃபெண்டர்களை முந்திக்கொண்டு பாய்ந்து வந்த சைல் லாரின், மிகக் குறுகிய தூரத்திலிருந்து பந்தை கோல் வலைக்குள் திணித்தார். இதனால் கனடா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

29-வது நிமிடத்தில் கனடா அணியின் தாஜோன் புகேனன் பந்தை வேகமாக கடத்தி வந்து, டிஃபெண்டர்களை ஏமாற்றி தனது இடது காலிற்கு பந்தை மாற்றினார். அங்கிருந்து அவர், அடித்த ஷாட், கத்தார் டிஃபெண்டர் மீது பட்டு பாக்ஸிற்குள் இருந்த ஜோனாதன் டேவிட் வசம் சென்றது. அவர், காற்றில் பறந்து வந்த பந்தை கண்ணிமைக்கும் நேரத்தில் தனது வலது காலால் மிக துல்லியமாக கோல் வலையின் வலது கார்னரின் கீழ் பகுதியை நோக்கி திணித்தார். இதனால் கடனா 2-0 என முன்னிலை பெற்றது.

33-வது நிமிடம் கனடாவின் தாஜோன் புகேனனை, கத்தார் டிஃபெண்டர் ஹோமாம் அகமது ஃபவுல் செய்தார். அதனால் அவருக்கு ரெட் கார்டு காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் கத்தார் அணி 10 வீரர்களுடன் விளையாடியது. முதல் பாதி ஆட்டத்தில் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 45+3-வது நிமிடத்தில் வலது புறத்தில் இருந்து ஜான்ஸ்டன் பந்தை லாவகமாக தூக்கி பாக்ஸிற்குள் அனுப்பினார்.

அங்கே தயாராக இருந்த சைல் லாரின் கோல் வலையை நோக்கி மிரட்டலான ஷாட்டை அடித்தார். அதை கத்தார் கோல்கீப்பர் அபுநாடா பாய்ந்து தடுத்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பந்து அவர் மீது பட்டு திரும்பி ஜோனாதன் டேவிட் கால்களுக்கு சென்றது.

அவர், காலியாக இருந்த நெட்டிற்குள் பந்தை மிக எளிதாக தட்டி தனது இரண்டாவது கோலையும், கனடாவின் 3-வது கோலையும் பதிவு செய்தார். இதால் முதல் பாதி ஆட்டத்தில் கனடா 3-0 என முன்னிலை பெற்றது. 53-வது நிமிடத்தில் கத்தாரின் அசிம் மடிபோ, கனடா மிட்பீல்டர் இஸ்மாயில் கோனேவை பின்னால் இருந்து ஃபவுல் செய்ததால் ரெட் கார்டு பெற்றார்.

இந்த மோசமான ஃபவுல் காரணமாக கோனேவின் இடது காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டு மைதானத்திலிருந்து வெளியேறினார். 2-வது ரெட் கார்டு காரணமாக கத்தார் அணி 9 வீரர்களுடன் விளையாடியது. 64-வது நிமிடத்தில் பதிலி வீரராக களமிறங்கிய நாதன் சாலிபா அற்புதமான ஃப்ரீ-கிக் மூலம் கனடாவின் 4-வது கோலை அடித்தார்.

கோல் அடித்த அடுத்த கணமே, சாலிபா நேராகச் சென்று படுகாயமடைந்து வெளியேறிய தனது சக வீரர் கோனேவின் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சியை கைகளில் ஏந்தி, கோலை அவருக்கு சமர்ப்பித்தார்.

75-வது நிமிடத்தில் வலது புறத்தில் இருந்து தாஜோன் புகேனன் அனுப்பிய துல்லியமான கிராஸ், பாக்ஸிற்குள் இருந்த ஷாஃபெல்பெர்க் வசம் சென்றது. அவர், பந்தை கட்டுப்படுத்த நேரம் எடுக்காமல், வந்த வேகத்திலேயே இலக்கை நோக்கி அடித்தார். அதைத் கத்தார் நடுகள வீரர் முகமது மனாய் தடுத்து வெளியேற்ற நினைத்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அது சுய கோலாக மாறியது. இதனால் கனடா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலையை எட்டியது.

90 நிமிடங்களின் முடிவில் கடனா 5-0 என முன்னிலையில் இருந்தது. காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 2-வது நிமிடத்தில் நாதன் சாலிபா உதவியுடன் பந்தை பெற்ற ஜோனாதன் டேவிட் கோல் அடித்து அசத்தினார். இது அவரது ஹாட்ரிக் கோலாக அமைந்தது. முடிவில் கனடா அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் கனடாவின் முதல் வெற்றியாக இது அமைந்தது. உலகக் கோப்பை வரலாற்றில் கனடா இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு டிரா, 6 தோல்விகளை பதிவு செய்துள்ளது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் கனடா அணி தனது முதல் ஆட்டத்தில் போஸ்னியா & ஹெர்சகோவினா அணியை 1-1 என டிரா செய்திருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் 4 புள்ளிகளுடன் (+6 கோல் வித்தியாசத்தில்) தனது பிரிவில் கனடா முதலிடத்தில் உள்ளதுடன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவதை ஏறக்குறைய உறுதி செய்துள்ளது.

ஜோனாதான் டேவிட் சாதனைகள்

* நடப்பு உலகக் கோப்பையில் லியோனல் மெஸ்ஸிக்கு பிறகு ஹாட்ரிக் அடித்த வீரர் என்ற பெருமையை ஜோனாதன் டேவிட் பெற்றார்.

* 1930-ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலகக் கோப்பையில் அமெரிக்காவின் பெர்ட் படேனாட் பராகுவேவுக்கு எதிராக ஹாட்ரிக் அடித்திருந்தார். அந்த வகையில் ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா அல்லாத பிற கண்டத்தைச் சேர்ந்த அணியை சேர்ந்த வீரர் ஒருவர் உலகக் கோப்பையில் ஹாட்ரிக் கோல் அடிப்பது இது 2-வது முறையாகும். அந்த வகையில் 96 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வட அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த வீரராக ஜோனாதன் டேவிட் ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்துள்ளார்

* உலகக் கோப்பை போட்டி ஒன்றில் ஒரே ஆட்டத்தில் 2 ரெட் கார்டுகளைப் பெற்ற முதல் ஆசிய அணி என்ற மோசமான சாதனையை கத்தார் பதிவு செய்தது.

* 1966-ம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கோப்பை போட்டி ஒன்றில் எதிரணியின் பெனால்டி பாக்ஸிற்குள் அதிக முறை பந்தைத் தொட்ட அணி (97 டச்சுகள்) என்ற சாதனையை கனடா படைத்தது.

* உலகக் கோப்பை வரலாற்றில் தொடரை நடத்தும் நாடு பெரிய அளவிலான கோல் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இது 4-வது முறையாகும். இதற்கு முன்னர் 1934-ல் இத்தாலி 7-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவையும், 1950-ல் பிரேசில் 6-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினையும், 1978-ல் அர்ஜெண்டினா 6-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியையும் வீழ்த்தியிருந்தன.

ஜோனாதன் டேவிட் ஹாட்ரிக் கோல் - கனடா அணிக்கு வரலாற்று வெற்றி | FIFA WC 2026
தென் கொரிய கோல் கீப்பரின் தவறு, ரால் ரேஞ்சலின் அற்புத ‘சேவ்’- அடுத்த சுற்றில் மெக்சிகோ! | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in