

சான் பிரான்சிஸ்கோ: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பே ஏரியாவில் உள்ள லெவிஸ் மைதானத்தில் நேற்று ‘ஜே’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜோர்டான் - அல்ஜீரியா அணிகள் மோதின. 36-வது நிமிடத்தில் அறிமுக அணியான ஜோர்டான் தனது முதல் கோலை அடித்தது.
முசா அல் தமாரி உதவியுடன் பந்தை பெற்ற நிஷார் அல் ரஷ்தான் இந்த கோலை அடித்தார். இதனால் ஜோர்டான் 1-0 என முன்னிலை பெற்றது. 69-வது நிமிடத்தில் அல்ஜீரியா பதிலடி கொடுத்தது. ரியாத் மஹ்ரெஸ் கார்னரில் இருந்து அடித்த பந்தை பதிலி வீரரான நாதிர் பென்புவாலி தலையால் முட்டி கோல் வலைக்குள் திணித்தார்.
இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. 82-வது நிமிடத்தில் அல்ஜீரியா வீரர் ஹாட்ஜ் மூசா கார்னரில் இருந்து உதைத்த பந்தை 6 அடி தூர பாக்ஸிற்குள் பெற்ற அமீன் குயிரி கோலாக மாற்றினார். இதனால் அல்ஜீரியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பின்னர் கடைசி வரை போராடியும் ஜோர்டான் அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் அல்ஜீரியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
2014-ம் ஆண்டு தொடருக்கு பின்னர் அல்ஜீரியா அணிக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும். 2014-ம் ஆண்டு தொடரில் அல்ஜீரியா லீக் சுற்றில் தென் கொரியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. உலகக் கோப்பை வரலாற்றில், எதிரணியிடம் முதல் கோலை வாங்கிய பின்னர் அல்ஜீரியா அணி ஒரு போட்டியில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்னதாக இத்தகைய சூழ்நிலைகளில் விளையாடிய போட்டிகளில் அல்ஜீரியா அணி 7 தோல்விகளையும், 2 டிராக்களையும் பதிவு செய்திருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் 3 புள்ளிகளை பெற்றுள்ள அல்ஜீரியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 27-ம் தேதி ஆஸ்திரியாவுடன் மோதுகிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அல்ஜீரியா நாக் அவுட் சுற்றில் கால்பதிக்க வாய்ப்பு உள்ளது. அதேவேளையில் 2-வது தோல்வியை சந்தித்த ஜோர்டான் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரியாவிடம் வீழ்ந்திருந்தது. ஜோர்டான் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது.