

நேற்று இந்தியா-ஜிம்பாப்வே போட்டியை விட இந்திய ரசிகர்கள், வீரர்கள், வீரர்களின் குடும்பத்தினர் டென்ஷனுடன் பார்த்த போட்டி மே.இ.தீவுகளுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெற்ற டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 போட்டிதான் என்பது இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஸ்தீப் சிங்கின் கூற்றிலிருந்து தெரியவருகிறது.
தென் ஆப்பிரிக்காவை மே.இ.தீவுகள் வீழ்த்தியிருந்தால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு ‘டான்ஸ்’தான். அதனால் இந்தியப் போட்டியை விட இந்தப் போட்டியை ஆர்வம் மேலிட பலரும் டென்ஷனுடன் பார்த்தனர்.
சாதாரண தினங்களில் தென் ஆப்பிரிக்கா தோற்கட்டும் மே.இ.தீவுகள் வெல்லட்டும் என்ற மனநிலையில் பார்க்கக் கூடிய இந்திய ரசிகர்கள் கூட நேற்று நம்மைத் தோற்கடித்த தென் ஆப்பிரிக்கா வெல்ல வேண்டும் என்று பிரார்த்தனை செய்த ஆசையின் முரண் நகைதான் என்ன!! அதே மனநிலையில் தான் அர்ஸ்தீப் சிங்கின் தந்தையும் இருந்தார் என்பதில் ஆச்சரியமில்லை.
இது தொடர்பாக அர்ஸ்தீப் சிங் ஆங்கில ஊடகம் ஒன்றில் தெரிவிக்கும் போது, “என் குடும்பத்தினரும் அறையில் இருந்தனர், மே.இ.தீவுகள், தென் ஆப்பிரிக்கா போட்டியை பார்த்த்துக் கொண்டிருந்தோம். எப்போதெல்லாம் மே.இ.தீவுகள் பேட்டர் சிக்சர் விளாசினாலும் என் தந்தை தென் ஆப்பிரிக்காவைத் திட்டிக்கொண்டேஇருந்தார், ‘என்ன செய்றீங்க?’ என்று டென்ஷன் காட்டினார்.
நான் போட்டியை ரசித்துக் கொண்டிருந்தேன், தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் பார்த்துக் கொண்டிருந்தேன். நாம் நம் மீதமுள்ள 2 போட்டிகளில் வெல்வோம், நன்றாக ஆடுவோம். முடிவு பற்றி கவலையில்லை என்ற மனநிலையில் இருந்தேன். அவர்கள் நன்றாக ஆடினர்.
அடுத்த போட்டியில் எங்கள் தலைவிதியை நாங்களே தீர்மானிக்கும் படி விட்டதற்கு நன்றி. அவர்கள் போட்டியைப் பார்ப்பது மிகப்பெரிய கேளிக்கை. அருமையாக ஆடுகின்றனர், இறுதிப் போட்டியில் அவர்களை வெல்ல முயற்சி செய்வோம்.” என்றார் அர்ஸ்தீப் சிங். இந்தியா-மே.இ.தீவுகள் அணிகள் வரும் ஞாயிறன்று கொல்கத்தாவில் மோதுகின்றன.