

கொல்கத்தா: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் விளாசிய 97 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 196 ரன்கள் இலக்கை 4 பந்துகள் மீதம் வைத்து வெற்றி கண்டது. சூர்யகுமார் யாதவ் (18), திலக் வர்மா (27), ஷிவம் துபே (8) ஆகியோரும் வெற்றிக்கு தங்களது பங்களிப்பை வழங்கினர்.
இந்நிலையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் கூறியதாவது: ஒவ்வொரு பங்களிப்பைப் பற்றியும் நீங்கள் பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது, ஏனென்றால் பல ஆண்டுகளாக, நாம் ஒரு சில பங்களிப்புகளைப் பற்றி மட்டுமே பேசி வருகிறோம். கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு, இது எப்போதும் குழு விளையாட்டாகவே இருக்கும்.
என்னை பொறுத்தவரையில் ஷிவம் துபே அடித்த 2 பவுண்டரிகளும் சஞ்சு சாம்சன் குவித்த 97 ரன்களைப் போலவே முக்கியம். ஏனென்றால் ஷிவம் துபே அந்த இரண்டு பவுண்டரிகளையும் அடிக்கவில்லை என்றால், சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்தது குறித்து பேசவே மாட்டீர்கள்.
பெரிய பங்களிப்பு தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கிறது. சிறிய பங்களிப்பு, அணி வெற்றி பெற உதவும். வெற்றி கோட்டைக் கடக்க உதவும் அந்தபங்களிப்பும் மிகவும் முக்கியமானது. நான் இருக்கும் வரை இதுதான் தத்துவமாக இருக்கும்.
டி20 கிரிக்கெட் பயிற்சி முறைகளில் தரவுகளை நான் நம்புவதில்லை. அதை நான் பார்த்ததில்லை. தரவு எதைப் பற்றியது என்று கூட எனக்குத் தெரியாது. ஏனென்றால் பயிற்சி முறைகள் என்பது உள்ளுணர்வைப் பற்றியது என்று நான் உணர்கிறேன்.
டி20 கிரிக்கெட் என்பது உள்ளுணர்வைப் பற்றியது. விளையாட்டு மற்றும் டி 20 வடிவம் பற்றி எனக்கு என்ன அறிவு இருந்தாலும், அதை நான் கேப்டனுக்குக் கொடுக்க முயற்சிக்கிறேன், என்னால் முடிந்தவரை அவருக்கு உதவ முயற்சிக்கிறேன். ஆனால், இறுதி முடிவை எடுப்பது கேப்டன் தான்.
நேர்மையாக கூறுவதென்றால் தரவுகளை நான் நம்பவில்லை, ஏனென்றால் அது மிகவும் மிகைப்படுத்தப்பட்டதாகும். என்னைப் பொறுத்தவரை, உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் எங்களிடம் இருப்பது எங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் என்று நான் நினைக்கிறேன்.
எங்களிடம் வித்தியாசமாகப் பயன்படுத்தக்கூடிய வீரர்கள் உள்ளனர், பல அணிகளுக்கு இந்த வசதி இல்லை. ஜஸ்பிரீத் பும்ரா அல்லது அர்ஷ்தீப் சிங் அல்லது வருண் சக்ரவர்த்தி போன்ற ஒருவரை ஆட்டத்தின் எந்த கட்டத்திலும் பயன்படுத்தலாம். பேட்டிங் பார்வையில், எங்களிடம் வலிமை இருக்கிறது. அது மிகவும் முக்கியமான ஒன்று.
வலு இருக்கும்போது, ஒருபோதும் இலக்கை துரத்தும் போது விலகி இருக்க மாட்டீர்கள். ஒருபோதும் விளையாட்டிலிருந்து வெளியேற மாட்டீர்கள். அரை இறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறோம். அவர்கள் உலகத்தரம் வாய்ந்த தரமான அணி. அவர்களிடம் நிறைய தரமான வீரர்கள் உள்ளனர்.
மேலும் வான்கடே மைதானம் கடினமானது என்பதை அனைவருமே அறிவார்கள். நாங்கள் அணிக்காகவும், நாட்டுக்காகவும் ஏதாவது சிறப்பாகச் செய்ய மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு கவுதம் கம்பீர் கூறினார்.
‘சஞ்சு உலகத் தரம் மிக்க வீரர்’
சஞ்சு சாம்சன் குறித்து கவுதம் கம்பீர் கூறும்போது, “நியூஸிலாந்துக்கு எதிரான டி 20 தொடர் சஞ்சு சாம்சனுக்கு மிகவும் கடினமானதாக அமைந்தது. அதனால், சில நேரங்களில் அவருக்கு ஓய்வளிப்பது மிகவும் முக்கியமாகத் தோன்றியது. சஞ்சு சாம்சனின் திறமையை நாங்கள் அறிவோம்.
அவர், சர்வதேச டி20 போட்டிகளில் 3 சதங்கள் விளாசியுள்ளார். சர்வதேச டி 20 போட்டிகளில் நிறைய வீரர்கள் 3 சதங்கள் விளாசியதில்லை. உலகக் கோப்பைத் தொடரில் எங்களுக்கு எப்போது அவருடைய உதவி தேவைப்படுகிறதோ அப்போது அவர் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றி பெற்றுத் தருவார் என்பது எங்களுக்குத் தெரியும். சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் அவர் சிறப்பாக விளையாடினார்.
அந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கம் கிடைத்தது.தற்போது மீண்டும் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்துள்ளார். சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட வேண்டும் என்பதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர், ஆட்டத்தை அதிரடியாக எடுத்துச் செல்லவில்லை. மிகவும் அமைதியாக நேர்த்தியான கிரிக்கெட் ஷாட்டுகளை மட்டுமே விளையாடினார். சஞ்சு சாம்சன் உலகத் தரத்திலான வீரர். அவரிடம் நிறைய திறமைகள் உள்ளன” என்றார்.