

சிட்னி: ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் 3 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக அபார வெற்றிபெற்று தொடரை 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் மெல்பர்னில் நடைபெற்ற 4-வது மற்றும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியிடம் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வியைத் தழுவியது.
இங்கிலாந்து அணி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று சாதித்தது. இந்நிலையில், ஆஷஸ் தொடரை இழந்தபோதும், நீண்டகால இடைவெளிக்குப் பிறகு இந்த வெற்றி அந்த அணிக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியான பிங்க் டெஸ்ட் போட்டி, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜனவரி 4) தொடங்க உள்ளது.
இந்நிலையில், சிட்னி டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. காயத்தால் போட்டியில் இருந்து விலகியுள்ள வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கிட்ஸனுக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீர், வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ பாட்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய மண்ணில் 5,468 நாள்களுக்குப் பிறகு மெல்பர்னில் கிடைத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, 5-வது போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.
இங்கிலாந்து அணி விவரம்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தெல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், வில் ஜாக்ஸ், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் டங்.