ஜூட் பெல்லிங்ஹாம் அபார ஆட்டம்: அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து | FIFA WC 2026

சர்ச்சைக்குரிய கோல் மறுப்பால் நார்வே ஏமாற்றம்
இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம்

இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம்

Updated on
2 min read

அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற நடப்பு ஃபிபா உலகக் கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில், ஜூட் பெல்லிங்ஹாம் மீண்டும் தனது அபார ஆட்டத்தால் இங்கிலாந்தை காப்பாற்றினார். அவரது இரட்டை கோல் உதவியுடன் இங்கிலாந்து, நார்வேயை 2-1 என்ற கணக்கில் கூடுதல் நேரத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஆனால் இந்தப் போட்டியிலும் தொடர்ந்து வீடியோ அசிஸ்ட் ரிவியூ சர்ச்சை தொடர்ந்தது 57-வது நிமிடத்தில் நார்வே 2-வது கோலை அடித்து அதிர்ச்சி முன்னிலை பெற்றது. ஆனால், இந்த மகிழ்ச்சி வி.ஏ.ஆர் தலையீட்டினால் கோல் மறுப்பாக மாறியது. நார்வே வீரர் டோர்ப்யோர்ன் ஹெக்கெம் அடித்த கோல், ஹாலண்டின் ஃபவுல் காரணமாக வி.ஏ.ஆர் பரிசீலனைக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது. இது கடும் ஏமாற்றத்தை நார்வே அணிக்கும் ரசிகர்களுக்கும் அளித்தது.

நார்வே சூப்பர் ஸ்டார் எர்லிங் ஹாலண்ட், மான்செஸ்டர் சிட்டி அணிக்காக இங்கிலிஷ் பிரிமியர் லீகில் ஆடிவருவதால் அவரது ஆட்டப்போக்கை இங்கிலாந்து பயிற்சியாளர் டச்செலும் வீரர்களும் நன்கு அறிந்திருந்ததால் அவர் இந்த ஆட்டத்தில் கச்சிதமாக முடக்கப்பட்டார்.

பெல்லிங்ஹாம் சூப்பர் ஸ்டார்

மெக்சிகோவுக்கு எதிரான முந்தைய போட்டியிலும் இரண்டு கோல்கள் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருந்த பெல்லிங்ஹாம், இம்முறையும் அதே சாதனையை நிகழ்த்தினார். முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் சமநிலை கோலை அடித்த அவர், கூடுதல் நேரத்தில் வெற்றிக் கோலையும் பதிவு செய்து இங்கிலாந்தின் நாயகனாகத் திகழ்ந்தார்.

இந்த இரண்டு கோல்களுடன் போட்டித் தொடரில் பெல்லிங்ஹாமின் கோல் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஹாரி கேனுடன் சமநிலையில் இருக்கும் அவர், போட்டியின் அதிக கோல் அடித்த வீரரான எர்லிங் ஹாலண்டைவிட ஒரு கோல் மட்டுமே பின்தங்கியுள்ளார். ஆனால் இந்த ஆட்டத்தில் ஹாலண்ட் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து, சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு வந்துள்ள அர்ஜெண்டினாவை எதிர்கொள்ள உள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து நான்காவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

புளோரிடாவின் கடுமையான வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக இரு அணிகளும் கடினமான சூழலில் விளையாடின. போட்டியின் 36-வது நிமிடத்தில் ஆண்ட்ரியாஸ் ஷெல்டெருப் அடித்த எதிர்பாராத ‘கிராஸ்’ இங்கிலாந்து கோல்கீப்பர் ஜோர்டன் பிக்ஃபோர்டை ஏமாற்றி நார்வேக்கு முன்னிலை பெற்றுத் தந்தது.

அதன்பின் நார்வேக்கு முன்னிலையை அதிகரிக்க பல வாய்ப்புகள் கிடைத்தன. குறிப்பாக, இரண்டு வீரர்கள் மட்டுமே முன்னேறிய எதிர்தாக்குதலில் அலெக்சாண்டர் சோர்லோத், அருகில் இருந்த ஹாலண்டுக்கு பந்தை வழங்காமல் வாய்ப்பை வீணடித்தது பின்னர் அந்த அணிக்கு பெரும் இழப்பாக அமைந்தது.

முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் ஆண்டனி கார்டனின் துல்லியமான பாஸை பெற்ற பெல்லிங்ஹாம், பெனால்டி பகுதிக்குள் நுழைந்து தரையோட்டமாக அடித்த ஷாட் மூலம் சமநிலையை ஏற்படுத்தினார்.

இரண்டாவது பாதியில் டோர்ப்யோர்ன் ஹெக்கெம் நார்வேக்காக கோல் அடித்தாலும், அதற்கு முன் ஹாலண்ட் இங்கிலாந்து வீரர் ஆண்டர்சனுக்கு எதிராக ஃபவுல் செய்ததாக வி.ஏ.ஆர் பரிசீலனையில் தீர்ப்பளிக்கப்பட்டதால் அந்த கோல் ரத்து செய்யப்பட்டது. இதனால் நார்வே வீரர்களும் ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர்.

ஆட்டம் கூடுதல் நேரத்தை நோக்கி நகர்ந்த நிலையில், மாற்று வீரர் மோர்கன் ரோஜர்ஸின் தொலைதூர ஷாட்டை நார்வே கோல்கீப்பர் நைலண்ட் சரியாகத் தடுக்கத் தவறினார். திரும்பிய பந்தை மின்னல் வேகத்தில் பின்தொடர்ந்த பெல்லிங்ஹாம் கோலாக மாற்றி, இங்கிலாந்துக்கு 2-1 என்ற வெற்றியை உறுதி செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் தாமஸ் டச்செல் தலைமையிலான இங்கிலாந்து, தொடர்ச்சியாக இரண்டாவது நாக்அவுட் ஆட்டத்திலும் பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

முக்கிய தருணங்கள்

>> 36-வது நிமிடம்: கோல் - ஆண்ட்ரியாஸ் ஷெல்டெருப்பின் எதிர்பாராத கிராஸ்-ஷாட் ஜோர்டன் பிக்ஃபோர்டை தாண்டி வலையில் பாய, நார்வே 1-0 என முன்னிலை பெற்றது.

>> 39-வது நிமிடம்: வாய்ப்பு தவறியது - அலெக்சாண்டர் சோர்லோத்தின் சக்திவாய்ந்த ஷாட் கோலுக்கு சற்றே மேலாகப் பறந்தது.

>> 44-வது நிமிடம்: வீணான வாய்ப்பு - எதிர்தாக்குதலில் ஹாலண்டுக்கு பாஸ் வழங்காமல் சோர்லோத் வாய்ப்பை இழந்தார்.

>> 45+2வது நிமிடம்: கோல் - ஆண்டனி கார்டனின் பாஸை பெற்ற ஜூட் பெல்லிங்ஹாம் பெனால்டி பகுதிக்குள் நுழைந்து துல்லியமான ஷாட்டில் சமநிலை கோலை அடித்தார்.

>> 57-வது நிமிடம்: கோல் ரத்து - டோர்ப்யோர்ன் ஹெக்கெம் அடித்த கோல், ஹாலண்டின் ஃபவுல் காரணமாக VAR பரிசீலனைக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது.

>> 76-வது நிமிடம்: அதிர்ஷ்டம் காப்பாற்றியது - அயரின் நெருக்கமான ஹெடர் குறுக்குக் கம்பத்தில் பட்டு வெளியேறியது.

>> 87-வது நிமிடம்: வாய்ப்பு - புகாயோ சகாவின் அபார கிராஸ் கோல் முன் சென்றாலும், இங்கிலாந்து வீரர்கள் யாரும் அதை கோலாக மாற்ற முடியவில்லை.

>> 93-வது நிமிடம்: கோல் - மோர்கன் ரோஜர்ஸின் தொலைதூர ஷாட்டை நைலண்ட் சரியாகத் தடுக்கத் தவறிய நிலையில், திரும்பிய பந்தை ஜூட் பெல்லிங்ஹாம் கோலாக மாற்றி இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in