

மெல்பர்ன்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 22 ஆயிரம் ரன்களை எட்டி இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் இடம்பிடித்து விளையாடி வருகிறார். நேற்று முன்தினம் முடிவடைந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின்போது சர்வதேச போட்டிகளில் 22 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் ஜோ ரூட்டும் இணைந்தார்.
2-வது இன்னிங்ஸில் அவர் 15 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் 22 ஆயிரம் சர்வதேச ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 9-வதாக அவர் இணைந்தார். 380 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 49.21 சராசரியுடன் 22 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார்.
இந்த சாதனையை இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்காரா, விராட் கோலி, ரிக்கி பாண்டிங், மஹேல ஜெயவர்த்தனே, ஜாக்கஸ் காலிஸ், ராகுல் திராவிட், பிரையன் லாரா ஆகியோர் செய்துள்ளனர். 22 ஆயிரம் சர்வதேச ரன்களை எட்டிய முதல் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் என்பது குறிப்பிடத்தக்கது.