

சவுத்தாம்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டி20 ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இங்கிலாந்தின் பட்லர் மற்றும் கேப்டன் ப்ரூக் ஆகியோர் தங்களது அதிரடி பேட்டிங் திறனை இதில் வெளிப்படுத்தி அசத்தினர்.
இந்த ஆட்டம் சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ஓட்டலில் இருந்து மைதானத்துக்கு புறப்பட்ட இந்திய அணி வீரர்கள் பயணித்த பஸ், போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் போட்டி திட்டமிட்டபடி 7 மணிக்கு தொடங்கப்படவில்லை. டாஸ் நிகழ்வு 7.15 மணிக்கு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 7.30 மணிக்கு போட்டி தொடங்கியது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது. தனது 2-வது சதத்தை விளாசிய ஜாஸ் பட்லர் 64 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 131 ரன்கள் விளாசிய நிலையில் ஷிவம் துபே பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஹாரி ப்ரூக் 45 பந்துகளில், 4 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 95 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த ஜோடி இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கி 2-வது விக்கெட்டுக்கு 17 ஓவர்களில் 233 ரன்களை வேட்டையாடியது. முன்னதாக பில் சால்ட் 6 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 258 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி ஆயத்தமானது.
இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். அபிஷக் 3 ரன்களில் ஆர்ச்சர் பந்தில் வெளியேறினார். சஞ்சு சாம்சன், 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து சாம் கரண் பந்தில் விக்கெட்டை இழந்தார்.
அதன் பின்னர் வந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் உடன் இணைந்து 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஷ்ரேயஸ், 28 ரன்களில் வெளியேறினார். அப்போது இந்திய அணி 10.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் சீரான இடைவெளியில் இந்தியா விக்கெட்டை இழந்தது.
இஷான் கிஷன் - 56, ஷிவம் துபே - 14, திலக் வர்மா - 53, சூர்யான்ஷ் ஷெட்கே - 7, அக்சர் படேல் - 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 56 ரன்களில் ஆட்டத்தை வென்றது. இந்த தொடரையும் 4-0 என்ற கணக்கில் வென்றது. ஆட்ட நாயகன் விருதை பட்லரும், தொடர் நாயகன் விருதை ஹாரி ப்ரூக்கும் பெற்றனர். முதல் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.