

தோனி
சென்னை: ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுடன் தோனி ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியது: “கேப்டன் பொறுப்பை சஞ்சு சாம்சனிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழங்கும் என நான் கருதவில்லை. அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செட்டிலாக சற்று நேரம் கொடுக்க வேண்டியது அவசியம். கடந்த 2024 சீசன் முதல் அவர் அணியை வழி நடத்தி வருகிறார்.
அவர் குறித்து யார் என்ன சொன்னாலும் பிரச்சினை இல்லை. தனது பாணியில் அவர் அணியை வழிநடத்த வேண்டும். அப்போதுதான் அதில் அவரது செயல்பாடு நமக்கு தெரியவரும். அந்தப் பணியை அவருக்கு சில ஆண்டுகள் கொடுக்க வேண்டும். அதன் பிறகு அவர் சரியில்லை என்ற எண்ணம் வந்தால் நம் வசம் சஞ்சு சாம்சன் இருக்கிறார். அவரிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்கலாம்.
சிஎஸ்கே அணியின் மஞ்சள் ஜெர்ஸியில் முன்னாள் கேப்டன் தோனிக்கு ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் கடைசி சீசனாக அமையலாம். இந்த சீசனில் அவர், வீரராகவும் ஆலோசகராகவும் செயல்படுவார் என நினைக்கிறேன். அவர் பேட்டிங் ஆர்டரில் பின்வரிசையில் பேட் செய்ய வரவே வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் 30-ம் தேதி அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உடன் முதல் லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் குவாஹாட்டியில் நடைபெறுகிறது. பெரிய மாற்றங்கள் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கட்டமைக்கப்பட்டுள்ளது. அனுபவ வீரர்களுடன் இளம் வீரர்கள் அதிகம் நிறைந்த அணியாக சிஎஸ்கே உள்ளது.
44 வயதான தோனி, ஐபிஎல் கிரிக்கெட்டில் 242 இன்னிங்ஸில் 5,439 ரன்கள் எடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 248 போட்டிகளில் விளையாடி 4,865 ரன்கள் எடுத்துள்ளார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஐந்து முறை அந்த அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்துள்ளார்.