டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர்: இந்தியா - கொரியா இன்று மோதல்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர்: இந்தியா - கொரியா இன்று மோதல்
Updated on
1 min read

சியோல்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் தகுதி சுற்று 2-ல் இந்தியா - கொரியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் சியோல் நகரில் நடைபெறுகிறது.

முதல் நாளான இன்று ஒற்றையர் பிரிவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் தட்சிணேஸ்வர் சுரேஷ், கொரியாவின் சூன்வூ குவானை எதிர்த்து விளையாடுகிறார். தட்சினேஷ்வர் சுரேஷ் டென்னிஸ் தரவரிசையில் 367-வது இடத்தில் உள்ளார். அதேவேளையில் சூன்வூ குவான் 150-வது இடம் வகிக்கிறார்.

2-வது ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், கொரியாவின் ஹியான் சுங்குடன் மோதுகிறார். தற்போது தரவரிசையில் 567-வது இடத்தில் உள்ள ஹியான் சுங், கடந்த 2018-ல் உலகத் தரவரிசையில் 19-வது இடத்தைப் பிடித்திருந்தார். தரவரிசையில் 236-வது இடத்தில் உள்ள சுமித் நாகல் காயத்தில் இருந்து மீண்டு களமிறங்குகிறார்.

2-வது நாளான நாளை முதலில் நடைபெறும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் என்.ராம் பாலாஜி, நிக்கி பூனச்சா ஜோடியானது கொரியாவின் உய்சுங் பார்க், ஜிசுங் நாம் ஜோடியை எதிர்கொள்கிறது. அதேவேளையில் நிக்கி பூனச்சா நடப்பு சீசனில் சாலஞ்சர்ஸ் தொடரில் 6 முறை கோப்பையை வென்றுள்ளார். உய்சுங் பார்க் 241-வது இடத்திலும், ஜிசுங் நாம் 112-வது இடத்திலும் உள்ளனர்.

இதைத் தொடர்ந்து நடைபெறும் மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் சுமித் நாகல் - சூன்வூ குவான், தட்சினேஷ்வர் - ஹியோன் சுங் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இந்தியா - கொரியா அணிகள் இடையிலான மோதலில் வெற்றி பெறும் அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர்: இந்தியா - கொரியா இன்று மோதல்
ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்: இந்தியா - ஜப்பான் இன்று மோதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in