

டேனியல் மேத்வதேவ். எலெனா ரைபகினா | கோப்புப் படங்கள்
பெங்களூரு: உலக டென்னிஸ் லீக் தொடரின் 4-வது சீசன் வரும் டிசம்பர் 17ம் தேதி பெங்களூருவில் உள்ள எஸ்.எம்.கிருஷ்ணா டென்னிஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடரின் முதல் 3 சீசன் போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. தற்போது முதன்முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளது.
4 நாட்கள் நடைபெறும் உலக டென்னிஸ் லீக்கில் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ், பிரான்சின் கேல் மோன்ஃபில்ஸ், 2022-ம் ஆண்டு விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற கஜகஸ்தானின் எலெனா ரைபகினா, ஸ்பெயினின் பவுலா படோசா உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளனர்.
இவர்களுடன் ரோகன் போபண்ணா, சுமித் நாகல், யுகி பாம்ப்ரி, அங்கிதா ரெய்னா, வள்ளி பாமிடிபதி, மாயா ரேவதி உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்களும் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளனர். இந்த தொடரில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகள் 4 அணிகளாக பிரிக்கப்படுவார்கள்.
போட்டிகள் ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்படும். ஒவ்வொரு மோதலும் ஆடவர் ஒற்றையர், மகளிர் ஒற்றையர், 2 இரட்டையர் பிரிவு ஆட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும். லீக் சுற்றின் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.