காயம் காரணமாக சீசனின் தொடக்க போட்டிகளை தவறவிடும் கம்மின்ஸ், ஹேசில்வுட் - IPL 2026

கம்மின்ஸ், ஹேசில்வுட்

கம்மின்ஸ், ஹேசில்வுட்

Updated on
1 min read

சென்னை: வரும் 28-ம் தேதி ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசன் தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த சீசனின் தொடக்கத்தில் சில போட்டிகளை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் மற்றும் ஆர்சிபி அணி பந்து வீச்சாளர் ஹேசில்வுட் தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பந்து வீச்சாளர்களான கம்மின்ஸும், ஹேசில்வுட்டும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வருகின்றனர். காயம் காரணமாக இருவரும் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடவில்லை. அதனால் ஆஸ்திரேலிய அணி குரூப் சுற்றோடு வெளியேறியது.

கடந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி பட்டம் வெல்ல ஹேசில்வுட்டின் பந்து வீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. மொத்தம் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி அணியின் கோப்பை கனவை மெய்ப்பித்தார். 35 வயதான அவர், கடைசியாக கடந்த அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி இருந்தார். அதன் பின்னர் அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சூழலில் ஐபிஎல் 2026 சீசனில் முதல் சில போட்டிகளை அவர் தவற விடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

இதேபோல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக உள்ள கம்மின்ஸ், கடந்த 2024 சீசனில் தனது அணியை இறுதிப்போட்டி வரை முன்னேற செய்தார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அவதிப்பட்டு வருகிறார். அவர் இந்த சீசனுக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணையும் வரை தற்காலிக கேப்டனை தேர்வு செய்யும் பணியில் அந்த அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தகவல்.

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் என இருவரது பங்களிப்பும் ஆஸ்திரேலிய அணிக்கு அவசிய தேவையாக அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் இங்கிலாந்து என வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மற்றும் 2027 உலகக் கோப்பை தொடர் என ஆஸ்திரேலிய அணி விளையாடுவதற்கான அட்டவணை தயாராக உள்ளது. இருவரும் தேசிய அணிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர்கள் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அவர்களை தவிர்த்து மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் 2026 சீசனில் விளையாட அடுத்த வாரம் இந்தியா புறப்பட உள்ளதாக தகவல்.

<div class="paragraphs"><p>கம்மின்ஸ், ஹேசில்வுட்</p></div>
IPL 2026 | “தோனி உடன் விளையாடுவது உற்சாகம்” - சஞ்சு சாம்சன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in