

சென்னை: அல் நாசர் கால்பந்து கிளப் அணிக்காக பைசைக்கிள் கிக் முறையில் கோல் அடித்து அசத்தினார் 40 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ.
ஞாயிற்றுக்கிழமை அன்று சவுதி புரோ லீக் கால்பந்து தொடரில் அல் கலீஜ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இந்த கோலை பதிவு செய்தார் ரொனால்டோ. இந்த ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் அல் நாசர் அணி முன்னிலை வகித்தது. அந்த சூழலில் ஆட்டத்தில் 90+6வது நிமிடத்தில் இந்த கோலை ரொனால்டோ ஸ்கோர் செய்திருந்தார்.
இது இந்த தொடரின் சிறந்த கோல்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இது ரொனால்டோ பதிவு செய்துள்ளார் 954-வது கோல். இதே போன்றதொரு கோலை கடந்த 2018-ல் கிளப் அணிக்காக பைசைக்கிள் கிக் முறையில் ரொனால்டோ பதிவு செய்தார். இந்த தொடரில் 9 போட்டிகளில் விளையாடி உள்ள அல் நாசர் அணி, அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் அந்த அணி முதலிடத்தில் உள்ளது.
கடந்த 2023 சீசன் முதல் ரொனால்டோ, அல் நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். அண்மையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தான் ஓய்வு பெறுவதாக ரொனால்டோ தெரிவித்திருந்தார். மேலும், எதிர்வரும் 2026 பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் தான் தனது கடைசி உலகக் கோப்பை தொடர் என ரொனால்டோ தெரிவித்திருந்தார்.