ஊழல் குற்றச்சாட்டு: அசாம் கிரிக்கெட் வீரர்கள் 4 பேர் இடைநீக்கம்

ஊழல் குற்றச்சாட்டு: அசாம் கிரிக்கெட் வீரர்கள் 4 பேர் இடைநீக்கம்
Updated on
1 min read

சையத் முஷ்தாக் அலி டிராபி 2025 போட்டிகளில் ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, நான்கு வீரர்களை இடைநீக்கம் செய்துள்ளது அசாம் கிரிக்கெட் சங்கம்.

அமித் சின்ஹா, இஷான் அகமது, அமன் திரிபாதி மற்றும் அபிஷேக் தாக்குரி ஆகிய 4 வீரர்கள் சூதாட்டத் தரகர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையில் உள்ளனர், இதனையடுத்து இவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, மாநில காவல்துறையின் குற்றப்பிரிவு அலுவலகத்தில் (Crime Branch) நால்வருக்கும் எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அசாம் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. சையத் முஷ்டாக் அலியில் பங்கேற்ற அணியின் சில வீரர்களையும் இவர்கள் ஊழலில் ஈடுபடுத்த முயற்சி செய்ததாகவும் தவறான செயல்களுக்கு தூண்டியதுமாக இந்த நான்கு வீரர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அசாம் கிரிக்கெட் சங்கச் செயலாளர் சனாதன் தாஸ் கூறுகையில், “குற்றச்சாட்டுகள் வெளிவந்ததும், பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு (ASCU) விசாரணை நடத்தியது. ACA சார்பிலும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. விளையாட்டின் நேர்மையை பாதிக்கும் வகையில் கடுமையான தவறுகளில் இவர்கள் ஈடுபட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் மேலும் மோசமடையாமல் தடுக்கும் நோக்கில் இவர்களை இடைநீக்கம் செய்துள்ளோம்,” என்றார்.

இடைநீக்கக் காலத்தில் எந்தவிதமான போட்டிகளிலும் இந்த நால்வரும் கலந்து கொள்ளக் கூடாது. அதேபோல், நடுவர், பயிற்சியாளர், அம்பயர், மேட்ச் ரெஃபரி உள்ளிட்ட எந்தவிதமான கிரிக்கெட் தொடர்பான செயல்பாடுகளிலும் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை கடுமையாக அமல்படுத்த அனைத்து மாவட்ட கிரிக்கெட் சங்கங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிளப்புகள் மற்றும் அகாடமிகளுக்கு இதுகுறித்து தகவல் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அசாம் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு: அசாம் கிரிக்கெட் வீரர்கள் 4 பேர் இடைநீக்கம்
ஜேக்கப் டஃபி, மைக்​கேல் ரே அசத்தல் பந்து வீச்சு: நியூஸிலாந்து அணி அபார வெற்றி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in