காமன்வெல்த் விளையாட்டு: பதக்கங்களை வென்று குவிக்குமா இந்திய படை?

74 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
காமன்வெல்த் விளையாட்டு: பதக்கங்களை வென்று குவிக்குமா இந்திய படை?
Updated on
3 min read

கிளாஸ்கோ: 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இன்று (23-ம் தேதி) தொடங்குகிறது. வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 74 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

போட்டி செலவுகளை குறைக்கும் வகையில் இம்முறை 19 விளையாட்டுகளில் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கிளாஸ்கோ நகரின் 4 இடங்களில் மட்டுமே போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பாரா விளையாட்டு போட்டியும் இந்தத் தொடருடன் இணைத்து நடத்தப்பட உள்ளது.

முதலில் காமன்வெல்த் போட்டியை நடத்த ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 2023-ம் ஆண்டு அந்த மாகாணம் செலவினங்களை காரணம் காட்டி போட்டியை நடத்துவதில் இருந்து பின்வாங்கியது. இதன் பின்னரே ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரம் போட்டியை நடத்த முன்வந்தது.

இம்முறை தடகளம், நீச்சல், ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ், டிராக் சைக்கிளிங், நெட்பால், பளுதூக்குதல், குத்துச்சண்டை, ஜூடோ, லான் பவுல், 3x3 கூடைப்பந்து ஆகிய 10 விளையாட்டுகளில் 215 நிகழ்வுகள் நடைபெற உள்ளன. காமன்வெல்த் விளையாட்டு ஸ்காட்லாந்தில் நடைபெறுவது இது 4-வது முறையாகும். இதற்கு முன்னர் 1970, 1986, 2014-ம் ஆண்டுகளில் காமன்வெல்த் விளையாட்டை ஸ்காட்லாந்து நடத்தியிருந்தது.

126 வீரர், வீராங்கனைகள்

தொடக்க நாளான இன்று ஓவோ ஹைட்ரோ மைதானத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக இந்த போட்டிக்காக சுமார் 160 மில்லியன் பவுண்டுகளை கிளாஸ்கோ செலவு செய்கிறது. இது பர்மிங்காமில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற தொடரின் செலவை விட ஏறத்தாழ 60 சதவீதம் குறைவு ஆகும்.

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவில் இருந்து 126 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இன்று நடைபெறும் தொடக்க விழாவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானு, லவ்லினா போர்கோஹெய்ன் ஆகியோர் இந்திய தேசியக் கொடியையும், போட்டிக்கான ஜோதியையும் ஏந்திச் செல்கின்றனர்.

இம்முறை மல்யுத்தம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், துப்பாக்கி சுடுதல் ஆகிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பதக்க வாய்ப்புகள் கணிசமாக குறையக்கூடும். 2022-ல் பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா 61 பதக்கங்கள் வென்றிருந்தது. இதில் 25 பதக்கங்கள் மேற்கண்ட நான்கு விளையாட்டுப் பிரிவுகளில் கிடைத்திருந்தது.

இதனால் இம்முறை தடகளம், குத்துச்சண்டை, பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகளில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகள் கணிசமான அளவில் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்ற அதிக அழுத்தம் உருவாகி உள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக தடகளத்தில் 32 பேர் களமிறங்குகின்றனர். பர்மிங்காமில் நடைபெற்ற போட்டியில் தடகளத்தில் இந்தியா 8 பதக்கங்கள் வென்றிருந்தது. ஆனால் இம்முறை வலுவான போட்டியாளர்கள் களமிறங்குவதால் அந்த எண்ணிக்கையை எட்டுவது கடினமாக இருக்கக்கூடும். தடகளத்தில் இம்முறை 22 பதக்க போட்டிகள் நடைபெறுகின்றன.

சவாலை எதிர்கொள்ளும் நீரஜ் சோப்ரா

இந்திய அணியில் ஆடவர் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா முன்னிலை வகிக்கிறார். எனினும் இம்முறை அவர், ‘வெற்றி பெற வாய்ப்புள்ள முதன்மை வீரராக’ அல்லாமல், ‘சவால் அளிக்கும் போட்டியாளர்’ என்ற புதிய பரிமாணத்தில் களம் காண்கிறார்.

ஏனெனில் கடந்த மாதம் நடைபெற்ற ரோம் டைமண்ட் லீக் போட்டியில் 92.62 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்த இலங்கையின் ரூமேஷ் தரங்கா, ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் ஆகியோர் நீரஜ் சோப்ராவுக்கு கடும் சவால்தரக்கூடும். நீரஜ் சோப்ராவைத் தவிர்த்து 100 மீட்டர் ஓட்டத்தில் குரிந்தர்வீர் சிங், உயரம் தாண்டுதல் வீரர் சர்வேஷ் குஷாரே, நீளம் தாண்டுதல் வீரர் முரளி சங்கர், டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல், ஜிம்னாஸ்டிக்கில் பிரனதி நாயக் ஆகியோருடன் ஆடவர், மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஓட்ட அணிகளும், பதக்கங்கள் வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதக்க முனைப்பில் மீராபாய் சானு

காமன்வெல்த் போட்டிகளில் வழக்கமாக இந்தியாவுக்கு அதிக பதக்கங்களைப் பெற்றுத் தரும் விளையாட்டுகளில் ஒன்றான பளுதூக்குதல் இம்முறையும் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவை மையமாக வைத்தே நகரும். 31 வயதான மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு, காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ந்து 3-வது தங்கம் வெல்லும் முனைப்பில் உள்ளார். அவருடன் ஞானேஸ்வரி யாதவும் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக திகழ்கிறார்.

இது ஒருபுறம் இருக்க தேசிய பயிற்சி முகாமில் பங்கேற்ற சில வீரர்கள் சமீபத்தில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதைத் தொடர்ந்து காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்கும் இந்திய பளுதூக்குதல் அணி 11 உறுப்பினர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பதக்க வாய்ப்புகளைக் குறைத்துள்ளது.

குத்துச்சண்டை

குத்துச்சண்டையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹெய்ன் (75 கிலோ எடை பிரிவு) மீது அனைவரின் பார்வையும் இருக்கக்கூடும். மேலும் தற்போதைய 57 கிலோ எடை பிரிவு உலகச் சாம்பியனான ஜாஸ்மின் லம்போரியா, பர்மிங்காமில் வென்ற வெண்கலப் பதக்கத்தை தங்கமாக உயர்த்தும் முயற்சியில் ஈடுபடக்கூடும். அதேவேளையில், ஆசிய சாம்பியன் ப்ரீதி பவார் (54 கிலோ), சாக் ஷி சவுத்ரி (51 கிலோ) மற்றும் அருந்ததி சவுத்ரி (70 கிலோ) ஆகியோரும் மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வெல்லக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.

ஆடவருக்கான குத்துச்சண்டை போட்டியில், அனுபவம் வாய்ந்த நரேந்தர் பெர்வால் (+90 கிலோ), உலகக் கோப்பை பதக்க வெற்றியாளர் சச்சின் சிவாச் (60 கிலோ) ஆகியோர் பதக்க மேடையை அலங்கரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரா விளையாட்டு

லான் பவுல் விளையாட்டில் கடந்த முறை தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணி, வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் அணி இம்முறையும் மாயங்கள் நிகழ்த்தக்கூடும். கடந்த முறை 3 பதக்கங்களைப் பெற்றுத் தந்த இந்திய ஜூடோ வீரர்கள் இம்முறை கடுமையான போட்டி இருந்து வரும் நிலையிலும் அந்தச் சாதனையைச் சமன் செய்யவோ அல்லது அதைவிடச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தவோ முயற்சிக்கக்கூடும். தொடக்க நாளான இன்று லான் பவுல் போட்டியில் இந்திய அணி களமிறங்குகிறது.

காமன்வெல்த் போட்டிகளில் பாரா விளையாட்டும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில் 6 விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பெரிய அளவில் பதக்கங்கள் வெல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பர்மிங்காமில் 2022-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என 61 பதக்கங்கள் வென்று 4-வது இடம் பிடித்திருந்தது. ஆனால் இம்முறை விளையாட்டுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் கடந்த முறை வென்ற பதக்க எண்ணிக்கையை நெருங்குவது கடினம் என்றே கருதப்படுகிறது.

எனினும் வரும் 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியா நடத்தவுள்ள நிலையில், கிளாஸ்கோவில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி, அகமதாபாத் காமன்வெல்த் போட்டிகளுக்கான சரியான அடித்தளத்தை அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமன்வெல்த் விளையாட்டு: பதக்கங்களை வென்று குவிக்குமா இந்திய படை?
கரப்பான் பூச்சி கட்சியினரின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பை தொடர்ந்து டெல்லியில் துணை ராணுவம் குவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in