

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்
கவுஹாத்தியில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் 405 ரன்கள் இலக்கை வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 39 பந்துகள் மீதமிருக்க வெற்றிகரமாக விரட்டி ஒருநாள் கிரிக்கெட்டின் இரண்டாவது பெரிய சேஸிங் சாதனையை நிகழ்த்தியது, பவுலர்களுக்கு பிட்சில் ஒன்றுமே இல்லை.
இரண்டாவது, ஒரே நாளில் 811 ரன்கள் 5 வீரர்களின் சதங்கள் என்று பவுலர்களுக்கு சவக்குழி தோண்டும் பிட்ச் ஆக மட்டுமல்லாமல் கிரிக்கெட்டுக்கே சவக்குழி தோண்டும் பிட்ச் ஆக இது அமைந்தது என்பதே சீரிய கிரிக்கெட் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
அதிலும் பிட்ச் இப்படி என்று தெரிந்தே, ஜம்மு காஷ்மீரின் அற்புத வேகப்பந்து வீச்சாளர் அகிப் நபியை இதில் ஆட வைத்து அவரது தன்னம்பிக்கையையும் கம்பீர் குலைத்துள்ளார். ஆனால், வெறும் வாய்ப்பூச்சாக நேற்றைய சாதனை வெற்றியை, “இது வெறும் பேட்டிங் மட்டும்தான் கிரிக்கெட் அல்ல” என்று தூய கிரிக்கெட் குறித்து கம்பீர் பேசியுள்ளார்.
ஒரே நேரத்தில் இத்தகைய பிட்சைக் கேட்டது கம்பீர்தான் என்ற குற்றச்சாட்டுகள் எழும் என்பதை முன்கூட்டியே தவிர்ப்பதற்காக இந்த நாடகப்பேச்சைப் பேசியுள்ளார் கம்பீர் என்பதாகவே இதைப் புரிந்து கொள்ள நேரிடுகிறது.
தனியார் ஊடக நிறுவனத்திடம் கம்பீர் கூறிய கருத்து: “இதோ பாருங்கள்! முற்றிலும் நேர்மையாகச் சொல்கிறேன், பேட்டுக்கும் பந்துக்கும் போட்டி இருக்க வேண்டும். ஏனெனில் கிரிக்கெட் என்றால் அதுதான். இது கிரிக்கெட் அல்ல இது வெறும் பேட்டிங் மட்டும்தான். பாருங்கள், ஒரு இளம் பவுலர் வீசுகிறார் எதிரணி 400-க்கும் மேல் ஸ்கோர் செய்கிறது, இன்னொரு அணி அதை வெற்றிகரமாக விரட்டுகிறது.
சாதனைக்கு இது தனித்துவமானது, ரசிகர்களுக்கும் இந்தப் போட்டி ஒரு தனி அனுபவம்தான் மறுக்கவில்லை. ஒளிபரப்பாளர்களுக்கு மிகவும் பிடித்தமானது இத்தகைய போட்டிகள். ஒரு உண்மையான கிரிக்கெட் ரசிகனாக, பயிற்சியாளனாக என்னைக் கேட்டால் பவுலர்கள் மீது எனக்கு இரக்கமே ஏற்படுகிறது.
இது போன்ற பிட்ச்களில் பவுலர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை. பவுலர்களுக்கு பந்து வீச பிட்சில் ஏதாவது கொஞ்சம் மீதம் வைத்திருக்க வேண்டும். பவுலர்கள் மீது கருணை வேண்டும், அவர்களுக்கு ஏதாவது கொஞ்சம் வைக்க வேண்டும். ஏனெனில் பந்து வீச்சு அனாலிசிஸ் பார்த்தால் மோசமாக இருக்கும், ஆனால் பவுலர்கள் அந்த அளவுக்கு மோசமாக வீசவில்லை என்பதுதான் உண்மை.
இருபுறமும் புதிய பந்து, பிட்சில் ஒன்றுமே இல்லை. 5 பீல்டர்கள் சர்க்கிளுக்குள், பவர் ஹிட்டிங், இவையெல்லாம் பவுலர்களை என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதையும் நாம் நேர்மையாகப் பார்க்க வேண்டும்.
பயிற்சியாளர் மற்றும் அணியின் ஆதரவுப் பணியாளர்களாக நாம் முதலில் கவனிக்க வேண்டியது, பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தினார்களா என்பதைத்தான். அவர்கள் தங்களது திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தியிருந்தால், அவர்களைக் கடுமையாக விமர்சிக்கக் கூடாது. பவுலிங் புள்ளிவிவரங்களை மட்டுமே பார்த்துக் கடுமையாக விமர்சித்தால், நம்மால் ஒருபோதும் சிறந்த பந்துவீச்சாளர்களை உருவாக்க முடியாது.
அகிப் நபிக்கு இத்தகைய சூழல்களில் ஓரளவு ஆதரவு அளிப்பதுடன், தவறுகளைச் சரிசெய்து கொள்ளவும் கூடுதல் வாய்ப்புகளை வழங்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக, இன்றைய ஆட்டத்தில் எந்தப் பந்துவீச்சாளருக்கும் சாதகமான சூழல் பெரிதாக அமையவில்லை.
உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், அந்த ஓராண்டில் மூன்று மாதங்கள் ஐபிஎல் தொடரிலும், மேலும் மூன்று மாதங்கள் இந்தியா - ஆஸ்திரேலியா தொடரிலும் சென்றுவிடும்.
இந்தத் தொடருக்குப் பிறகு நாம் விளையாடுவதற்கு ஏறக்குறைய 20 ஒருநாள் போட்டிகளே உள்ளன. இலங்கைக்கு எதிராக மூன்று போட்டிகள், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் எனப் பார்த்தால், 20 போட்டிகள் என்பது அதிக எண்ணிக்கையல்ல. எனவே, நமக்குக் கால அவகாசம் மிகவும் குறைவாகவே உள்ளது. எந்தத் திட்டங்களை வகுத்தாலும், எந்த மாற்று வாய்ப்புகளைத் தயார் செய்தாலும், அவற்றை மிக விரைவாகச் செயல்படுத்த வேண்டியது அவசியம்.
ஐபிஎல் தொடருக்குப் பிறகு நம்மிடம் இருக்கும் மாற்று வாய்ப்புகள் என்னென்ன, உலகக் கோப்பைக்கான விரிவான திட்டத்தில் எந்தெந்த வீரர்களைத் தயாராக வைத்திருக்கிறோம் என்பதையெல்லாம் அப்போதுதான் நடைமுறைப்படுத்த முடியும். எனவே, இப்போதுதான் வெவ்வேறு வீரர்களுக்கு வாய்ப்பளித்துப் பரிசோதித்துப் பார்க்க வேண்டிய நேரம்.
இன்று அகிப் நபிக்கு வாய்ப்பளித்ததைப் போலவே, ஜிம்பாப்வே தொடர்வரை மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பளித்து, ஒருநாள் போட்டிகளில் அவர்கள் எத்தகைய பங்களிப்பை வழங்க முடியும் என்பதை மதிப்பிடத் திட்டமிட்டுள்ளோம்.
அடுத்த போட்டியில், தொடரின் முடிவு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட நிலையில், நபிக்கு மீண்டும் வாய்ப்பளிக்கலாம். ஆனால், அத்தகைய போட்டியில் தொடரை வெல்ல வேண்டும் என்ற அழுத்தம் இருக்காது. தொடரை வெல்ல வேண்டிய சூழலில் ஏற்படும் அழுத்தமும், முடிவு எதுவாக இருந்தாலும் பாதிப்பில்லாத போட்டியில் ஏற்படும் சூழலும் முற்றிலும் வேறுபட்டவை” என்றார்.
இவ்வாறு அகிப் நபி பற்றிக் கூறும் போது அடுத்த போட்டியில் இருக்க மாட்டார் என்பதை சூசகமாகத் தெரிவிக்கும் அதே வேளையில் இந்தப் போட்டியில் இப்படி வீசியதற்காக அவரை மட்டும் டிராப் செய்து விட்டார் என்ற பேச்சு எழக்கூடாது என்ற சாமர்த்திய தொனியில் பேசியுள்ளார். ஆனால் குஜராத் லாபி குர்னூர் பிரார் பற்றி இவர் கூறும் கருத்துக்கள் அகீப் நபி பற்றி கூறுவது போல் இல்லை என்பதில்தான் கம்பீரின் சூட்சமம் உள்ளது:
“குர்னூர் பிரார் ரன்களை அள்ளிக்கொடுத்துள்ளாரே என்று அவர் மீது விமர்சனங்கள் எழும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அவர் எவ்வளவு அதிகமாகக் கடினமான சூழல்களிலும், இக்கட்டான சூழ்நிலைகளிலும் பந்துவீசுகிறாரோ, அது இந்திய கிரிக்கெட்டுக்கு அவ்வளவு நல்லது.
ஆனால், இதுபோன்ற நேரங்களில் நாம் அவர்களை எவ்வளவு அதிகமாகச் சோதித்துப் பார்க்கிறோமோ, அது இந்திய கிரிக்கெட்டுக்கு அவ்வளவு நல்லது.”
இது எப்படி இருக்கு? இதுதான் கம்பீர், குர்னூர் பிரார் அடி வாங்கி ரத்தம் வந்தா அது தக்காளி சட்னிதான் ரத்தம் அல்ல, அகிப் நபிக்கு வந்தா அது ரத்தம் மட்டும்தான்.