

2026 உலகக் கோப்பையின் ஆரம்ப ஆச்சரியங்களில் ஒன்றாக அமைந்தது ஸ்பெயின் - கேப் வெர்டே மோதல். உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முன்னணி அணிகளில் ஒன்றான ஸ்பெயினை கோலின்றி தடுத்து நிறுத்திய கேப் வெர்டே அணியின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகித்தவர் 40 வயதான கோல்கீப்பர் வோசின்ஹா (Vozinha).
பல ஆண்டுகளாக சர்வதேச கால்பந்து போட்டிகளில் அமைதியாக தனது பணியைச் செய்து வந்த அவர், இந்தப் போட்டியின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தார்.
ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய தீவு நாடான கேப் வெர்டேவில், மிண்டெலோ நகரில் பிறந்தவர் ஜோசிமார் ஜோசே எவோரா டயாஸ். இன்று உலகம் அறியும் ‘வோசின்ஹா’ என்ற பெயர், கால்பந்து மைதானத்தில் உருவானதல்ல, அவரது குடும்ப வாழ்க்கையில் இருந்தே பிறந்தது.
ராணுவப் பணியில் இருந்த தந்தையும், குடும்பத்தை நடத்த உழைத்த தாயாரும் காரணமாக, சிறுவயதிலேயே அவர் தாத்தா - பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். பள்ளி முடிந்தவுடன் தெருக்களே அவரது விளையாட்டு மைதானமாக மாறிவிடும். கால்பந்து மீது இருந்த ஈர்ப்பு, அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது.
வயதில் மூத்த சிறுவர்களுடன் விளையாடும்போது அடிபட்ட நாட்களும் இருந்தன. தோல்வியால் அழுத நாட்களும் இருந்தன. சிலசமயங்களில் ஏமாற்றத்துடன் வீட்டுக்குத் திரும்பியபோது, அவருக்கு ஆறுதலாக இருந்தது தாத்தா - பாட்டியின் அரவணைப்புதான். இதைக் கவனித்த நண்பர்கள், அவரை கிண்டலாக ‘வோசின்ஹா’ என்று அழைக்கத் தொடங்கினர். பின்னர், அதுவே உலகக் கோப்பை மேடையில் ஒலித்த பெயராக மாறியது. ‘வோசின்ஹா’ என்பது ‘செல்லமான பாட்டி’ என்றும் பொருள் கொள்ளலாம்.
கால்பந்து உலகம் பெரும்பாலும் இளம் வயதில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களை முன்னிறுத்துகிறது. ஆனால், வோசின்ஹாவின் வாழ்க்கை அந்த வழக்கமான பாதையில் செல்லவில்லை.
கேப் வெர்டேவின் உள்ளூர் அணிகளில் தொடங்கிய அவரது பயணம், பின்னர் அங்கோலா, மால்டோவா, சைப்ரஸ், ஸ்லோவாக்கியா மற்றும் போர்ச்சுகல் உள்ளிட்ட பல நாடுகளைக் கடந்தது. புதிய சூழல்கள், புதிய அணிகள், புதிய எதிர்பார்ப்புகள் என ஒவ்வொரு கட்டமும் அவருக்கு சவாலாக இருந்தது.
தொழில்முறை கால்பந்தில் நீண்ட காலம் தொடர்ந்து விளையாடியிருந்தாலும், உலகளாவிய கவனம் அவர்மீது அதிகமாகப் படவில்லை. இருந்தபோதிலும் தனது திறனை மேம்படுத்துவதிலேயே அவர் கவனம் செலுத்தினார்.
கால்பந்தில் 40 வயது என்பது பெரும்பாலான வீரர்கள் ஓய்வை நோக்கிச் செல்லும் காலமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, உலகக் கோப்பை போன்ற உயர்மட்ட போட்டிகளில் அந்த வயதில் விளையாடுவது அரிதானது. அந்த நிலையில், தனது முதல் உலகக் கோப்பையில் விளையாடிய வோசின்ஹா, அனுபவமும் பொறுமையும் இன்னும் முக்கியமான பலமாக இருக்க முடியும் என்பதை நிரூபித்தார்.
கோல்கீப்பர்களின் பங்களிப்பு பெரும்பாலும் தவறு நிகழும்போது மட்டுமே அதிகமாக கவனிக்கப்படுகிறது. ஆனால் வோசின்ஹாவின் பலம், தவறுகளைத் தவிர்ப்பதிலும், அணிக்கு நம்பிக்கை அளிப்பதிலும் இருந்தது.
சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பது, அழுத்தமான சூழ்நிலையிலும் அமைதியாக செயல்படுவது, சக வீரர்களை வழிநடத்துவது ஆகியவை அவரது ஆட்டத்தின் முக்கிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன.
அதனால்தான் 2026 உலகக் கோப்பையின் முதல் போட்டி, அவரது வாழ்க்கையின் முக்கிய தருணமாக மாறியது.
உலகக் கால்பந்தின் மிகப் பெரிய சக்திகளில் ஒன்றுதான் ஸ்பெயின் அணி. மறுபுறம், கேப் வெர்டே உலகக் கோப்பையில் முதல்முறையாக விளையாடும் சிறிய தீவு நாடு. போட்டிக்கு முன் கணிப்புகள் அனைத்தும் ஸ்பெயினுக்கே சாதகமாக இருந்தன.
ஆனால், போட்டி தொடங்கிய பிறகு எதிர்பார்க்கப்பட்ட கதை அப்படியே நடைபெறவில்லை. ஸ்பெயின் தொடர்ந்து தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டது. அவற்றைத் தடுத்து நிறுத்துவதில் வோசின்ஹாவின் சேவ்கள் முக்கியப் பங்கு வகித்தன. அந்தப் போட்டியில் அவர் ஏழு முக்கிய சேவ்களை நிகழ்த்தி, ஸ்பெயின் அணியின் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்தார். அவரது அமைதியான ஆட்டமும், சரியான நிலைப்பாடும் கேப் வெர்டே அணிக்கு நம்பிக்கையை அளித்தன.
இறுதியில், அந்தப் போட்டி கோலின்றி முடிந்தது. ஸ்பெயினுக்கு அது ஏமாற்றமான முடிவாக இருந்திருக்கலாம். ஆனால், கேப் வெர்டேவுக்கு அது வரலாற்றுச் சாதனையாக அமைந்தது.
போட்டிக்குப் பிறகு முன்னாள் ஸ்காட்லாந்து வீரரும் கால்பந்து விமர்சகருமான பேட் நெவின், வோசின்ஹாவின் ஆட்டத்தை “மிகவும் சிறப்பானது” எனப் பாராட்டினார். முன்னாள் இங்கிலாந்து வீரர் லீ டிக்சனும், கேப் வெர்டே அணி பெற்ற புள்ளி முழுமையாக தகுதியானது என்றும், அது அந்த நாட்டின் கால்பந்து வரலாற்றில் மிகச் சிறந்த செயல்பாடுகளில் ஒன்று என்றும் குறிப்பிட்டார்.
பல கால்பந்து நிபுணர்கள், அவரது சேவ்களை விட அவரது அமைதி, சரியான நிலைப்பாடு மற்றும் தலைமைத்துவமே ஆட்டத்தின் வெற்றிக்குக் காரணம் என்று சுட்டிக்காட்டினர்.
ஆனால், அந்த இரவின் மிக முக்கியமான பாராட்டு, ஒரு தாயின் நம்பிக்கையாக இருந்தது.
போட்டிக்கு முன்பே தனது மகன் மீது முழு நம்பிக்கை வைத்திருந்த அவரது தாயார், போட்டிக்குப் பிறகு வோசின்ஹாவின் ஆட்டத்தை பெருமையுடன் பாராட்டினார். உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் வந்தபோதும், தாயின் அங்கீகாரம் அவருக்கு தனித்துவமானதாக இருந்தது.
கால்பந்து வரலாற்றில் பல பெரிய கோல்கீப்பர்கள், கோப்பைகள் வென்றவர்கள், சாதனைகள் படைத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் வோசின்ஹாவின் கதை, சாதனைகளை மட்டுமே பற்றியதல்ல. அது நீண்ட கால காத்திருப்பையும், தாமதமாக வந்த அங்கீகாரத்தையும், வாழ்க்கை எத்தனை முறை சோதித்தாலும், தனது இலக்கை விட்டுவிடாத ஒருவரைப் பற்றியதாகும்.
பல வீரர்கள் தங்கள் பயணத்தை முடித்திருக்கும் வயதில், வோசின்ஹா உலகக் கோப்பை மேடையில் தனது பெயரைப் பதிவு செய்தார். அதனால்தான் அவரது கதை ஒரு கோல்கீப்பரின் கதையாக மட்டுமல்லாமல் தாமதமாக வந்த வெற்றியையும், பல ஆண்டுகளாக கைவிடப்படாத ஒரு கனவையும் பற்றிய கதையாகவும் நிற்கிறது.
அதேபோல், ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டி முடிந்த சில மணி நேரங்களிலேயே, கேப் வெர்டே கோல்கீப்பர் வோசின்ஹாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் உலக அளவில் வைரலானது. போட்டி தொடங்குவதற்கு முன்பு வரை சுமார் 50,000 பேர் மட்டுமே பின்தொடர்ந்து வந்த அவரது இன்ஸ்டாகிராம் பக்கம், போட்டி முடிந்த சில மணி நேரங்களிலேயே 25 லட்சத்தைக் கடந்து சாதனை படைத்தது.
இன்று உலக வரைபடத்திலும், கூகுளிலும் கேப் வெர்டேவை பலரும் தேட வைத்துள்ளதும் வோசின்ஹாவின் அற்புத ஆட்டத்திறனுக்கு கிடைத்த மகத்தான வெற்றி!