பும்ராவாயினும் அச்சமில்லை... முதல் பந்தே சிக்ஸ் - சூரியவன்ஷி தர்பார்!

பும்ராவாயினும் அச்சமில்லை... முதல் பந்தே சிக்ஸ் - சூரியவன்ஷி தர்பார்!
Updated on
2 min read

நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் 11 ஓவர்கள் போட்டியாக நடந்தது. இருந்தாலும் இந்தப் போட்டியின் செல்லிங் பாயிண்ட் ஆன சூரியவன்ஷி - பும்ரா மோதல் சுவாரஸ்யம் குறையவில்லை. நேற்று சூரியவன்ஷியின் பக்கமே வெற்றி என்று கூறலாம்.

ட்ரெண்ட் போல்ட்டோ, ஹர்திக் பாண்டியாவோ முதல் ஓவரை வீசாமல் அரைகுறை வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரிடம் கொடுத்தார் பாண்டியா. அந்த ஓவர் அவரது பூப்பந்துகளால் பவுண்டரி மழையாக 4 பவுண்டரி 1 சிக்சருடன் 22 ரன்கள் ஓவராக அமைந்தது.

கடந்த 2025 ஐபிஎல் போல் தீபக் சாஹர், சூரியவன்ஷியை வீழ்த்தி விடுவார் என்று ஹர்திக் பாண்டியா அவரிடம் கொடுத்திருக்கலாம் ஆனால் வைபவ்வே தேவையில்லை நானே இவரை உரித்து விடுகிறேன் என்று உரித்து எடுத்துவிட்டார் ஜெய்ஸ்வால். நல்ல வேளை வைபவ் சூரியவன்ஷியிடம் தீபக் சாஹர் சிக்கியிருந்தால் சாஹர் பாடு திண்டாட்டம் தான், அதுவும் அவர் வீசிய லெந்த் சூரியவன்ஷிக்கு அல்வா போல்தான்.

பும்ரா அடுத்த ஓவரை வீச வேண்டும், சூரியவன்ஷி அவரை எப்படி ஆடுகிறார் என்று பார்க்க வேண்டுமென்பதே ரசிகர்கள் உட்பட போட்டியைப் பார்த்த அனைவரின் ஆர்வமாகவும் இருந்தது. பும்ரா வந்து வீசினார். இதுவரை அவரை எந்த விதப் போட்டியிலும் எதிர்கொள்ளாத வைபவ் சூரியவன்ஷி என்ன செய்யப்போகிறார் என்ற டென்ஷன் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் முகத்தில் தெரிந்தது. பும்ரா வீசிய முதல் பந்து மிடில் அண்ட் லெக் பந்து உள்ளே லேசாக வந்தது.

வேகம் இல்லை 131.2 கிமீ வேகம்தான். கேட்க வேண்டுமா? சிறுவன் வைபவ் அதை அலட்சியமாக மிட் ஆன் மேல் சிக்சராக மாற்ற ஸ்டேடியமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. அதே பும்ரா ஓவரின் 4வது பந்தில் மீண்டும் பும்ரா பந்து ஒன்று ஸ்லோயர் ஒன் ஷார்ட் பிட்ச் ஆக ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே வீசப்பட சுறுசுறுப்பான கால்களும் விரைவு கதி கைகளும் உடனடியாக இயங்க டீப் ஸ்கொயர் லெக்கில் இன்னொரு சிக்ஸ்.

அவ்வளவுதான் பும்ரா லேசாக ரசித்துச் சிரிக்க, ரோஹித் சர்மா ‘இல்லை இல்லை’ என்பது போல் தலையை ஆட்ட, ஹர்திக் பாண்டியாவும் ‘என்ன இது?’ என்பது போல் முகத்தை ஆச்சரியத்தில் வலிக்க... 15 வயது சிறுவன் உலகின் தலை சிறந்த நடப்பு வேகப்பந்து வீச்சாளரை சர்வ அலட்சியமாக 2 சிக்சர்களை விளாசி விட்டார். அடுத்து ட்ரெண்ட் போல்ட் வந்தார்.

ஜெய்ஸ்வால் 2 சிக்சர்களை விளாச, கடைசி பந்து வைபவ் சூரியவன்ஷி ஸ்ட்ரைக்கில் இருந்தார், இன்னொரு ஆர்வம், போல்ட் போன்றவரை எப்படி ஆடுகிறார் என்று... ஆனால் இங்கும் ஒன்றும் பயனில்லை. வீடியோ கேம் பேட்டிங் போல் அவரை டீப் பேக்வர்ட் ஸ்கொயர் லெக் மேல் தூக்கி இன்னொரு சிக்ஸ் விளாசினார். ஷர்துல் தாக்கூர் வந்தார் அவரையெல்லாம் மதிக்கவேயில்லை வைபவ், முதல் பந்து கவரில் பேய் சிக்ஸ்.

அடுத்து கவரில் பளார் என்று ஒரு அறை நான்கு ரன்கள். அடுத்த சிக்ஸ்தான் வாயை அடைத்து விடும் சிக்ஸ். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பேக் ஆஃப் லெந்த் பந்து பொதுவாக இதை பின்னால் சென்று ஆஃப் திசையிலோ அல்லது கிராஸ் பேட் போட்டால் டீப் மிட்விக்கெட்டிலோ அடிப்பது வழக்கம் ஆனால் வைபவ் சைட் ஸ்க்ரீனுக்கு மேலாக ஒரே தூக்குத்தூக்கி சிக்சர் விளாச ஷர்துல் தாக்கூருக்கு கை வரவில்லை.

அடுத்த பந்து ஷர்துல் தாக்கூரின் அதிர்ஷ்டம் மீண்டும் பளார் என்று கவர் திசையில் ஆட கொஞ்சம் ஃபிளாட் ஆக முழு பவருடன் அடித்தார் சூரியவன்ஷி இதுவும் சிக்ஸ் போயிருக்கும் ஆனால் திலக் வர்மா எம்பிப் பிடித்தார். 13 பந்துகளில் 39 என்று 300 ஸ்ட்ரைக் ரேட்டுடன் தன் பணியைச் செய்தாலும் அவுட் ஆனதில் கடும் அதிருப்தியுடன் வெளியேறினார் சூரியவன்ஷி.

பும்ராவுக்கு ஒரே ஓவரில் 2 சிக்ஸ். தாக்கூருக்கு 3 சிக்ஸ், போல்ட்டை அலட்சியமாக ஒரு சிக்ஸ் என்று ஆடும் இவரை விரைவில் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுக்கத் தொடங்கி விட்டன.

பும்ராவாயினும் அச்சமில்லை... முதல் பந்தே சிக்ஸ் - சூரியவன்ஷி தர்பார்!
தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் அதிரடி மாற்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in