

இந்திய கால்பந்து அணி வீரர்கள்
கொல்கத்தா: பிரேசில் கால்பந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி உடன் ஒரே ஒரு ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்த ஆட்டத்துக்கான விற்பனை குறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
சர்வதேச அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியான கால்பந்து போட்டி வரும் அக்.3-ம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தை நேரில் பார்க்க வேண்டுமென இந்திய கால்பந்து ஆர்வலர்கள் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர். குறிப்பாக பிரேசில் அணியின் இன்றைய நட்சத்திரங்களை இந்த ஆட்டத்தின் போது நேரில் காண முடியும் என்பது இந்த ஆர்வத்துக்கான காரணமாக உள்ளது.
ஐந்து முறை கால்பந்து உலகக் கோப்பை பட்டத்தை வென்றுள்ள பிரேசில் அணி, முதல் முறையாக இந்திய அணியுடன் விளையாடுகிறது. அதுவும் கால்பந்து ஆர்வலர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது.
கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடைபெற்ற ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் ரவுண்ட் ஆப் 16 சுற்று வரை பிரேசில் அணி முன்னேறி இருந்தது. இந்நிலையில், செப்டம்பர் மற்றும் அக்டோபரில் ஆசிய கால்பந்து கூட்டமைப்பை சேர்ந்த அணிகளுடன் நட்பு ரீதியிலான போட்டிகளில் பிரேசில் விளையாட உள்ளது. அந்த வகையில் இந்திய அணி உடன் பிரேசில் விளையாடுகிறது.
உலக தரவரிசையில் டாப் 5 இடங்களில் உள்ள அணிகளில் ஒன்றான பிரேசில் அணி உடன் இந்திய அணி விளையாடுவது சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. தற்போது இந்திய அணி இந்த உலக தரவரிசையில் 138-வது இடத்தில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மோசமான ஆட்டத்தால் இந்திய அணி தரவரிசையில் சரிவை எதிர்கொண்டு பின்தங்கியது.
ஆட்டத்துக்கான டிக்கெட் பெறுவது எப்படி?
இந்தியா மற்றும் பிரேசில் அணிகளுக்கு இடையிலான இந்த சர்வதேச ஆட்டத்துக்கான டிக்கெட் இன்று (செப்.2) மாலை 4 மணி முதல் டிஸ்ட்ரிக்ட் செயலி மற்றும் வலைதளத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் கட்டணம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என தகவல். Early பேர்ட் டிக்கெட் முறையில் இந்த டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது.