

தரம்சாலா: ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. தரம்சாலாவில் இன்று நடைபெறும் தகுதி சுற்று 1 ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
இந்நிலையில் தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது: ஐபிஎல் தொடர் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சவாலானது. ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கின்றன. எல்லைக்கோடுகள் சிறியதாக உள்ளன. அதோடு பனிப்பொழிவும் இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் செய்யும் சிறிய தவறு கூட சிக்ஸராக மாறிவிடுகிறது. ஆனால், எந்த மாதிரியான ஆடுகளம் அல்லது சூழல் கிடைத்தாலும், அதில் எங்களது சிறந்த பங்களிப்பை வழங்கவே நாங்கள் முயற்சி செய்கிறோம். ஆடுகளங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது என் கைகளில் இல்லை.
இறுதிப் போட்டி பெங்களூருவில் இருந்து அகமதாபாத்துக்கு மாறியதும் என் கட்டுப்பாட்டில் இல்லை. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைதானம். எனவே இறுதிப்போட்டி எங்கு நடக்கவிருக்கிறதோ, அங்குதான் அது நடக்கும். இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த சீசன் முழுவதும் நாங்களும், குஜராத் அணியும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம். போட்டி நடைபெறும் குறிப்பிட்ட நாளில், எந்த அணி தங்களது திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்துகிறதோ மற்றும் அழுத்தமான சூழலில் பதற்றமடையாமல் நிதானமாக இருக்கிறதோ, அந்த அணியே வெற்றி பெறும்.
பந்துவீச்சுதான் எங்களது பலம். பவர்பிளேயில் நாங்கள் எப்படி பந்துவீசுகிறோம் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும். மேலும் நாங்கள் இங்கு ஸ்கோரை டிஃபென்ட் செய்ய வரவில்லை, எதிரணியைத் தாக்கி விளையாடும் மனநிலையுடன்தான் இங்கு வந்திருக்கிறோம் என்பது அணியில் உள்ள அனைவருக்கும் தெரியும். நாங்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தப்பார்ப்போம்.
இதுவரை நாங்கள் அதைத்தான் செய்திருக்கிறோம். ஒரே விஷயத்தை மீண்டும் துல்லியமாக செய்வதுதான் ஆட்டத்தின் முடிவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். புவனேஷ்வர்குமார் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவருக்குத் தனது பலம் என்னவென்று நன்றாகத் தெரியும். அவர், அணியில் உள்ள இளம் பந்துவீச்சாளர்களிடம் பேசும் விதமும், அணியில் அவர் இருப்பதும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. பில் சால்ட் உடற்தகுதியுடன் இருக்கிறார். பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். ஆனால் விளையாடும் லெவனை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. இவ்வாறு ரஜத் பட்டிதார் கூறினார்.