

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் டி20 லீகில் பிரிஸ்பன் ஹீட் அணிக்காக முதன் முதலில் ஆடிய பாகிஸ்தான் இடது கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் ஷா அஃப்ரீடி வீசிய அந்த 2 பந்துகளுக்குப் பிறகே பவுலிங் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
பீபிஎல் என்று அழைக்கப்படும் பிக்பாஷ் லீகில் மெல்போர்ன் ரெனகேட் அணிக்கு எதிராக ஷாஹின் அஃப்ரீடி அறிமுகப் போட்டியில் ஆடிய போதே இது பெரிய பின்னடைவைக் கொடுத்துள்ளது. ‘அபாயகரமான பவுலிங்’ என்று சொல்லி 2 பந்துகளுக்குப் பிறகே அவர் வீசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ஷாஹின் அஃப்ரீடி அடுத்தடுத்து 2 பீமர்களை (ஹை ஃபுல்டாஸ்) வீசினார், இதனையடுத்து அபாயகரமான பந்து வீச்சு என்று அவர் வீச அனுமதி மறுக்கப்பட்டது.
18-வது ஓவரில் ஷாஹின் ஷா அஃப்ரீடி வீச முதல் பந்து ஃபுல்டாஸ், பீக் என்ற வீரர் அதனை சிக்சருக்குத் தூக்கினார். 2வது பந்தும் தாழ்வான ஃபுல்டாஸ் ஒரு ரன் வந்தது. ஆகவே 2 லீகல் பந்துகள் வீசப்பட்ட நிலையில் 3வது பந்து ஹை ஃபுல்டாஸ், இதை லாங் ஆனில் அடித்து செய்ஃபர்ட் சதம் கண்டார். இது பந்து உயர ஃபுல்டாஸ் என்பதற்காக நோ-பால் ஆனது.
மீண்டும் 3வது பந்து யார்க்கர், ஒரு ரன், 4வது பந்தும் மீண்டும் ஃபுல்டாஸ் நோபால். மீண்டும் அதே 4வது பந்தை வீச ஒரு ரன் வந்தது. 5வது பந்து பயங்கரமான பீமர், மெல்போர்ன் ரெனெகேட் வீரர் பீக் ஒதுங்கிக் கொண்டார் கீப்பராலும் பிடிக்க முடியவில்லை நோபாலுடன் சேர்த்து 2 பை ரன்கள், மொத்தம் 3 ரன்கள். இந்த ஓவரில் 2வது பீமர் இது என்பதால் அவர் தொடர்ந்து பந்து வீச அனுமதிக்கப்படவில்லை.
மேலும் அவர் வீசிய 2.4 ஓவர்களில் 43 ரன்களை விட்டுக்கொடுத்து சாத்து வாங்கியுள்ளார். இதில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 2 வைடுகள் 3 நோபால்களை வீசினார். மொத்தம் 16 பந்துகளில் 5 பந்துகள் நோபால்கள் வைடுகள். படுமோசமான பந்து வீச்சு.
விதிமுறை கூறுவதென்னவெனில் இடுப்புக்கு மேல் பிட்ச் ஆகாமல் போகும் எந்த ஒரு பந்தும் விதிமுறைக்குட்பட்ட பந்து அல்ல. அந்தப் பந்துகள் நோ-பால். மேலும் இந்த விதிமுறையின் துணைப்பிரிவு கூறுவதென்னவெனில் நடுவர் அத்தகைய பந்துகள் பேட்டருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை என்று கருதினால் அவர் பந்து வீச அனுமதி மறுக்க இடமுண்டு. இங்கு பேட்டர் என்ன கவச உடைகள் அணிந்தாலும் சரி கவலையில்லை, அம்மாதிரி பந்து வீச்சு அபாயகரமாந்து என்று தீர்ப்பளிக்க களநடுவருக்கு உரிமை உண்டு.
அந்த கடைசி பீமர் உண்மையில் வெகு வெகு அபாயகரமானது. முகத்திற்கு நேராக வந்த பீமர் அது. இரண்டாவது முறையாக அப்படி ஒரு பந்து வருகிறது என்றால் நடுவர் அவரை வீசக் கூடாது என்று தடை செய்ய விதிகளில் இடமுண்டு, அந்த அடிப்படையில் ஷாஹின் அஃப்ரீடியின் அறிமுகப் போட்டியே மிக மோசமாக அமைந்தது.