

ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் பயணம் மேற்கொள்ளும் அணிகள் 3 விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும். ஒன்று பிட்ச், இரண்டு அதன் ரசிகர்கள், மூன்றாவது அதன் வாய்வீச்சு ஊடகங்கள். இதில் அனைத்திலும் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது ‘பாஸ்பால்’ இங்கிலாந்து அணி.
பாஸ்பால் என்னும் ஒரு வார்த்தையும் அதைச்சுற்றி இங்கிலாந்து அணியின் கிரிக்கெட்டும் கடும் கேலிக்கும் கிண்டல்களுக்கும் ஆளாகி வருகின்றன. அதுவும் பெர்த் டெஸ்ட் 2 நாட்களில் முடிந்து இங்கிலாந்தின் இழிவான தோல்விக்குப் பிறகே இன்னும் காமெடி பீஸ் ஆகி வருகிறது இங்கிலாந்து. இந்நிலையில், ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடுமையாக இங்கிலாந்தை வெறுப்பேற்றி வருகின்றனர்.
தி ஆஸ்திரேலியன் ஊடகம் ‘டெத் ஆஃப் பாஸ்பால்’ என்று ஒரு போலி ஒப்பாரியையே எழுதி கிண்டல் செய்துள்ளது. அதாவது அந்த வாசகங்கள் ஓர் இரங்கல் செய்தி போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதுதான் பெரிய நகைச்சுவை:
“பாஸ்பாலின் நேசத்திற்குரிய நினைவாக, அது பெர்த்தில் நவம்பர் 22, 2025 அன்று அகால மரணம் அடைந்தது. துக்கமடைந்தவர்கள், நெருக்கமானவர்கள், 3-ம் நாள் ஆட்டத்தைக் காண டிக்கெட் வைத்திருந்தவர்கள் ஆழமான தங்கள் இரங்கலை புலம்பல் வழியே வெளியிட்டுள்ளனர். உடல் தகனம் செய்யப்பட்டு சாம்பல் ஹீத்ரூவுக்கு முதல் விமானத்தில் அனுப்பி வைக்கப்படும்.”
தி வெஸ்ட் ஆஸ்திரேலியன் - ’இங்கிலாந்தின் ‘டாடி’
இங்கிலாந்து அணி முதல் டெஸ்டுக்காக பெர்த்தில் இறங்கியதிலிருந்து, மேற்கு ஆஸ்திரேலியர்கள் அவர்களிடம் கருணை காட்டவில்லை. டிராவிஸ் ஹெட் அதிரடியை ஓர் உருவகமாக்கி மேற்கு ஆஸ்திரேலியாவே இங்கிலாந்துக்குக் கருனை காட்டவில்லை என்று நக்கலடிக்கின்றனர்.
ஜோ ரூட்டை மேற்கு ஆஸ்திரேலியர்கள் ‘சராசரி ஜோ’ என்று கிண்டலடித்ததையும் இந்த ஊடகம் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் இங்கிலாந்து அணியை “Brit of a Laugh” என்று கேலி செய்துள்ளது. ஆஷஸ் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியை டாடீஸ் அணி - வயதான அணி - என்று இங்கிலாந்து ஊடகங்கள் கிண்டலடித்ததற்குப் பதிலடியாக இங்கிலாந்தின் டாடி என்று ட்ராவிஸ் ஹெட் படத்தை பிரசுரம் செய்துள்ளது.
கூரியர் மெயில்: முதல் டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிந்ததால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு வசூலில் 2 மில்லியன் பவுண்டுகள் இழப்பு.
பிரிஸ்பனிலும் வேகப்பந்து வீச்சு பிட்ச் அதுவும் பகலிரவு பிங்க் பந்து டெஸ்ட் என்பதால் கடைசி செஷன் முழுதும் விளக்கொளியில் நடைபெறும் என்பதால் நிச்சயம் இந்த டெஸ்ட்டிலும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு நட்டம்தான் ஏற்படும், அதாவது இங்கிலாந்து இங்கும் 2, 3 நாட்களில் தோற்று நட்டம் ஏற்படுத்தும் என்று கூரியர் மெயில் கிண்டலடித்துள்ளது.
சிட்னி மார்னிங் ஹெரால்ட் ஊடகம் ‘இருட்டை நோக்கி இங்கிலந்து’ என்று பிரிஸ்பன் பகலிரவு டெஸ்ட் என்பதை விவரிக்க இந்தப் பதத்தைப் பயன்படுத்தி இங்கிலாந்தை தன் பங்கிற்கு வெறுப்பேற்றியுள்ளது.
மேலும் சில ஊடகங்கள் பெர்த் டெஸ்ட் தோல்விக்குப் பிறகே பெர்த்திலிருந்து பிரிஸ்பனுக்கு வண்டி ஓட்டிக்கொண்டே செல்லலாம் போலிருந்தது என்று மார்க் உட் தெரிவித்ததை வைத்து கடும் கிண்டல்களை அவிழ்த்து விட்டுள்ளது.
அதாவது டிராவிஸ் ஹெட் அடித்த அடி தன்னை இந்த முடிவுக்கு இட்டுச் சென்றது என்று உட் விளையாட்டுக்குச் சொல்லப்போக வசமாக ட்ரோலில் சிக்கினார்.
பெர்த்திலிருந்து பிரிஸ்பன் 2500 மைல்கள், டிரைவ் செய்து கொண்டு போக முடியுமா? டிராவிஸ் ஹெட் அடித்த அடியில் மார்க் உட் ‘ஹெட்’ கழன்று விட்டது போல என்று மரை கழன்று விட்டது என்று கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.