

மதுரை: 14-வது ஆடவருக்கான ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது. இதில் 17-வது இடத்துக்கான ஆட்டத்தில் நேற்று வங்கதேசம் - ஆஸ்திரியா அணிகள் மோதின.
மதுரையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வங்கதேசம் 5- 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரை 17-வது இடத்துடன் நிறைவு செய்தது.
அந்த அணி சார்பில் அமிருல் இஸ்லாம் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். அவர், 15, 50 மற்றும் 57-வது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோல்களாக மாற்றினார். ஹோசிஃபா ஹொசைன் (27-வது நிமிடம்), ரகிபுல் ஹசன் (35-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
எகிப்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி 21-வது இடத்தை பிடித்தது. கொரியா 5-4 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 19-வது இடத்துடன் தொடரை நிறைவு செய்தது. நமீபியா 4-2 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தி 24 அணிகள் கலந்து கொண்டுள்ள தொடரில் 23-வது இடம் பிடித்தது.