

டாக்கா: கிரிக்கெட் விளையாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு பிரச்சினையை தீர்க்க வங்கதேச வாரியம் முன்வர வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வங்கதேசத்தில் நடைபெற்ற இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் கிரிக்கெட்டிலும் எதிரொலித்து வருகிறது. தாக்குதல் சம்பவத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஐபிஎல் அணியில் இடம்பெற்றுள்ள வங்கதேச வீரர் முஸ்டாபிஸுர் ரஹ்மானை நீக்கவேண்டும் என்று பாஜக, சிவசேனா, இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து பிசிசிஐ உத்தரவின் பேரில் அவர் கேகேஆர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் விளையாட வங்கதேசம் மறுத்துவிட்டது. பாதுகாப்பு கருதி தங்கள் அணி மோதும் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று ஐசிசி-யிடம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், வங்கதேசத்தின் இந்தக் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துவிட்டது.
மேலும், ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகளை இந்தியாவில்தான் வங்கதேச அணி விளையாட வேண்டும். இல்லையென்றால் அந்த அணி புள்ளிகளை இழக்க நேரிடும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி எச்சரிக்கை செய்துள்ளது. ஆனால், உலகக் கோப்பைப் போட்டியை இந்தியாவில் விளையாட மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து அடம்பிடித்து வருகிறது.
பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பையில், வங்கதேச அணி தனது லீக் ஆட்டங்களை இந்தியாவின் கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாட அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர வங்கதேசம் மறுத்து வருகிறது.
இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு பிரச்சினையை தீர்க்க வங்கதேச வாரியம் முன்வர வேண்டும் என்று வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் வேண்டுகோள் விடுத்தார்.
டாக்காவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முஸ்டாபிஸுர் ரஹ்மான் ஐபிஎல் கொல்கத்தா அணியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரத்தை பேசித் தீர்க்கலாம். வங்கதேச நாட்டில் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். புதிது புதிதாக கிரிக்கெட் வீரர்கள் உருவாகி வருகின்றனர். கிரிக்கெட்டில் வங்கதேசம் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது.
நமது நாட்டின் கிரிக்கெட் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்தப் பிரச்சினை குறித்து சிந்திக்க வேண்டும். இதுபோன்று முடிவு எடுக்கும் முன்பு அனைவரையும் கலந்தாலோசித்து முடிவு எடுத்திருக்கலாம்.பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் முன்வரவேண்டும்.
இது ஓர் உணர்ச்சிகரமான பிரச்சினை என்பதால் நான் கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தேன். இந்தப் பிரச்சினையை வங்கதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்குள் பேசித் தீர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.