

தரம்சாலா: நடப்பு ஐபிஎல் சீசனின் 55-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. இதில் பஞ்சாப் அணியை 3 விக்கெட்டுகளில் வீழ்த்தியது டெல்லி. இதில் டெல்லி வீரர்கள் அக்சர் படேல் மற்றும் டேவிட் மில்லர் என இருவரும் அரைசதம் விளாசினர்.
இந்த ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணிக்காக பிரயான்ஷ் ஆர்யா 56, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 59, கூப்பர் கானொலி 38, சூர்யான்ஷ் ஷெட்கே 21 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் ஸ்டார்க் மற்றும் மாதாவ் திவாரி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். முகேஷ் குமார் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
211 ரன்கள் என்ற இலக்கை இரண்டாவது இன்னிங்ஸில் விரட்டியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது டெல்லி. அபிஷேக் போரல் 5, கே.எல்.ராகுல் 9, சஹில் பராக் 13 ரன்கள் எடுத்து வெளியேறினர். அதன் பின்னர் 4-விக்கெட்டுக்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் ஸ்டப்ஸ் மற்றும் அக்சர் படேல்.
ஸ்டப்ஸ் ஆட்டமிழந்த பின்னர் டேவிட் மில்லர் உடன் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் அக்சர். அவர் 30 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். மில்லர் 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்த அசுதோஷ் சர்மா, 10 பந்துகளில் 24 ரன்கள் விளாசினார். அதன் மூலம் டெல்லி அணி வெற்றிக்கோட்டை நெருங்கியது. பஞ்சாப் வீரர் யஷ் தாக்குர் வீசிய 19-வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டு வெற்றியை உறுதி செய்தார் டெல்லி வீரர் நபி. அந்த ஓவரில் 22 ரன்களை யஷ் கொடுத்திருந்தார். 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியுடன் சேர்த்து தொடர்ச்சியாக 4 தோல்வி அடைந்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.