ஆஸ்திரேலிய அதிரடியில் நொறுங்கியது இங்கிலாந்து பவுலிங்!

ஆஸ்திரேலிய அதிரடியில் நொறுங்கியது இங்கிலாந்து பவுலிங்!
Updated on
2 min read

பெர்த் டெஸ்ட்டில் இரண்டாவது இன்னிங்சில் டிராவிஸ் ஹெட் போட்டு அடித்த அடியில் கதிகலங்கிப் போன இங்கிலாந்துப் பந்து வீச்சு இப்போது பிரிஸ்பன் டெஸ்ட்டிலும் செம சாத்து வாங்கியது. ஆஸ்திரேலியாவின் கடைசி 3 விக்கெட்டுகள் 128 ரன்களை எடுத்தனர் இதனையடுத்து ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்து 177 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதில் ஏகப்பட்ட கேட்ச்களையும் தரைதட்டச் செய்தது இங்கிலாந்து ஃபீல்டிங். இங்கிலாந்துக்கு நல்ல பவுலிங் கோச் தேவைப்படுகிறது. ஏனெனில் ஒன்று, ஒரேயடியாக ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசுவது; இல்லையெனில் ஒரேயடியாக ஃபுல் லெந்த் பந்துகளை வீசுவது என்று மோசமாக வீசி வருகிறது. பென் ஸ்டோக்ஸின் மட்டமான களவியூகம் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்திற்கே வழிவகுத்தது.

பிரிஸ்பன் பிட்ச் கொஞ்சம் பேட்டிங் களமாக மாறியிருந்தாலும் நல்ல முயற்சி செய்து நல்ல லெந்த்தில் குறிப்பிடத்தகுந்த வேகத்தில் கடினமான இடங்களில் பந்துகளை பிட்ச் செய்தால் நிச்சயம் விக்கெட்டுகள் கிடைக்கும் என்ற நிலையில்தான் உள்ளது. இங்கிலாந்து பவுலிங்கைப் பார்க்கும் எந்த ஒருவரும் என்ன பிரிஸ்பன் பேட்டிங் பிட்ச் ஆகிவிட்டதா என்றுதான் சந்தேகம் கொள்வர்.

முதல் 3 ஓவர்களை மெய்டன்களாக வீசியும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. ஜோப்ரா ஆர்ச்சர் லெந்திற்குத் தேடிக் கொண்டிருக்கிறார், பிரைடன் கார்ஸ், அட்கின்சன், பென் ஸ்டோக்ஸ் எல்லாருமே ஷார்ட் பிட்ச் உத்தியைக் கடைப்பிடித்து ஸ்லிப் வலுவான களவியூகத்தை நம்பாமல் வீசி ஓவருக்கு 6 ரன்களைக் கசியவிட்டனர். 5 கேட்ச்களைக் கோட்டை விட்டனர். கார்ஸ் பிற்பாடு 2 விக்கெட்டுகளை ஒரே ஓவரில் எடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் 29 ஓவர்களில் 152 ரன்கள் 4 விக்கெட் என்று முடிந்தார்.

கார்ஸின் பந்துவீச்சு வரைபடத்தைப் பார்த்து வர்ணனையில் இருந்த மார்க் வாஹ், ‘மூன்றாம் தரப் பந்து வீச்சு’ என்று விமர்சித்தார் என்றால் பந்து வீச்சு நிலையை புரிந்து கொள்ளலாம். மூன்றாம் தர பவுலிங் என்று வாஹ் சொன்னதோடு மூன்றாம் தர பவுலர்கள் என்று சொன்னதே பெருந்தன்மையான ஒரு கருத்து என்பதைப் போல் மேலும் மோசமாகவே வீசினர்.

2வது டெஸ்டில் ஆடும் தொடக்க வீரர் வெதரால்ட் 45 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். பிரிஸ்பனில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த ஓப்பனரும் விரைவு அரைசதம் கண்டதில்லை. 43 ஓவர்களில் 291/3 என்று ஆஸ்திரேலியா பாஸ்பால் வழிமுறையில் ஆடியது. பாஸ்பால் பாஸ்பால் என்று பூச்சாண்டி காட்டுவது எல்லாம் எதிரணியை பாஸ்பால் ஆடவைப்பது தான் போலிருக்கிறது இங்கிலாந்தின் பவுலிங் உத்தி. படுமோசமான பந்து வீச்சுக்கு ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை நேற்று கொடுத்ததே பெரிய தவறுதான்.

இன்று காலையும் அதே தவறைச் செய்தார் பென் ஸ்டோக்ஸ், 378/6 என்ற நிலையில் அலெக்ஸ் கேரி விக்கெட்டை கட் ஆடச் சென்று 63 ரன்களில் வெளியேறினார் அட்கின்சன் விக்கெட்டை எடுத்தார். அதன் பிறகு மைக்கேல் நேசர் 16 ரன்களில் ஸ்டோக்ஸிடம் வெளியேறினார். 416/8 என்பதிலிருந்து மிட்செல் ஸ்டார்க், போலண்ட்டை வீழ்த்த பிரம்மப் பிரயத்தனம் செய்தனர் இங்கிலாந்து.

இருவரும் சேர்ந்து 75 ரன்களை 9வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர், ஸ்டார்க் 141 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 77 ரன்களைச் சேர்த்து இங்கிலாந்து பந்து வீச்சின் ஓட்டை உடைசல்களை மேலும் அம்பலப்படுத்தினார். கடைசி விக்கெட் சேர்ந்து மேலும் 40 ரன்களைச் சேர்த்தனர், கடைசியில் வில் ஜாக்ஸ் முடித்து வைத்தார்.

ஒரு கட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் ‘க்ளூ லெஸ்’ என்பார்களே அது போன்று கையைப் பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தார். ஆர்ச்சர் மட்டும்தான் பவுலிங்கில் சதத்தை 13 ரன்கள் வித்தியாசத்தில் தவற விட்டார், மற்றபடி கார்ஸ் 152, கஸ் அட்கின்சன் 114, பென்ஸ்டோக்ஸ் 113 என்று பவுலிங்கில் சதங்கள் கண்டனர். ஒரு பிரிஸ்பன் பிட்சில் ஆஸ்திரேலிய பேட்டர்களில் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்ச ஸ்கோர் என்று விடுவதெல்லாம் இங்கிலாந்துக்கு மட்டுமே சாத்தியம்.

இப்போது இங்கிலாந்து 177 ரன்கள் பின் தங்கிய நிலையில் சற்று முன் வரை 3 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் என்று தட்டுத்தடுமாறி வருகிறது. 2-0 என்று உதை வாங்கிய பிறகு ஆஸ்திரேலியாவில் எதிரணி மீண்டெழுந்து தொடரை வெல்வதெல்லாம் பொய்யாய்ப் பெருங்கனவாய்ப் போகும் என்பதே உண்மை.

ஆஸ்திரேலிய அதிரடியில் நொறுங்கியது இங்கிலாந்து பவுலிங்!
ஜஸ்டின் கிரேவ்ஸின் ஆல் டைம் கிரேட் இரட்டைச் சதம்: வரலாறு படைத்த மே.இ.தீவுகளின் மாரத்தான் டிரா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in