

டார்வின்: ஆஸ்திரேலியா - வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டார்வினில் உள்ள மாராரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் சேர்த்தார். வங்கதேச அணி தரப்பில் ஹசன் மஹ்மூத் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து விளையாடிய வங்கதேச அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 110 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்தது. தன்ஸித் ஹசன் 101, கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 84 ரன்கள் விளாசினர். மெஹிதி ஹசன் மிராஸ் 32, ஹசன் மஹ்மூத் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய வங்கதேசம் அணி 138 ஓவர்களில் 426 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஹசன் மஹ்மூத் 14, தைஜூல் இஸ்லாம் 17, எபாதத் ஹொசைன் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். போராட்ட குணத்தை வெளிப்படுத்தி மட்டையை வீசிய மெஹிதி ஹசன் மிராஸ் 154 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 6 விக்கெட்களை வீழ்த்தினார். மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களையும் பாட் கம்மின்ஸ், நேதன் லயன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து 228 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 53 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.
தொடக்க வீரர்களான ஜேக் வெதரால்டு 0, டிராவிஸ் 17 ரன்களில் ஹசன் மஹ்மூத் பந்தில் நடையை கட்டினர். மார்னஷ் லபுஷேன் 31 ரன்கள் எடுத்த நிலையில் தைஜூல் இஸ்லாம் பந்தில் போல்டானார். ஸ்டீவ் ஸ்மித் 88 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்த நிலையில் மெஹிதி ஹசன் மிராஸ் பந்து வீச்சில் அவரிடமே பிடிகொடுத்து வெளியேறினார். கேமரூன் கிரீன் 86 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 43 ரன்களும், அலெக்ஸ் கேரி 50 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வங்கதேச அணி தரப்பில் மஹ்மூத் ஹசன் 2 விக்கெட்களை வீழ்த்தினார். தைஜூல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். கைவசம் 6 விக்கெட்கள் இருக்க 67 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.
இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதலில் பின்தங்கியுள்ள ரன்களைச் சரிசெய்து, அதன் பின்னர் சவாலான இலக்கை நிர்ணயிப்பதற்காக பெரிய போராட்டத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. மறுபுறம் ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் டெஸ்ட் வெற்றியையும், வரலாற்றுச் சிறப்புமிக்க மிகப்பெரிய அளவிலான வெற்றியையும் பதிவு செய்ய வங்கதேச அணிக்கு மேற்கொண்டு 6 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகின்றன.
இந்நிலையில், இன்று காலை நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் அலெக்ஸ் கேரி மற்றும் வெப்ஸ்டர் ஆகியோர் தங்களது விக்கெட்டை இழந்தனர். கிரீன் அரை சதம் கடந்து விளையாடி வருகிறார்.
5 கேட்ச்கள் மிஸ்
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பீல்டிங் மோசமான வகையில் இருந்தது. 3-வது நாளான நேற்றும் 3 கேட்ச்களை அந்த அணி தவறவிட்டது. இந்த அணி இந்த போட்டியில் இதுவரை மொத்தம் 5 கேட்ச்களை கோட்டைவிட்டுள்ளது.
300 விக்கெட்கள்
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் 28 ஓவர்களை வீசி 89 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை கைப்பற்றினார். அவர், 5-வது விக்கெட்டை கைப்பற்றிய போது சர்வதேச டெஸ்ட் அரங்கில் 300 விக்கெட்கள் மைல்கல் சாதனையை எட்டினார். டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய 9-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஹேசில்வுட் பெற்றார்.