

கேப் டவுன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இதையடுத்து தொடரைக் கைப்பற்றப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்-டவுனில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது நாள் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மேட் ரென்ஷாவும், டிராவிஸ் ஹெட்டும் களமிறங்கினர்.
டிராவிஸ் ஹெட் 41 ரன்கள் எடுத்த நிலையில் வீழ்ந்தார். இதையடுத்து களம்புகுந்த மார்னஸ் லபுஷேன் ரன் கணக்கைத் தொடங்காமலேயே வீழ்ந்தார். இதனால் 2 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி சரிவில் இருந்தது.
ஆனால் 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேமரூன் கிரீன், மேட் ரென்ஷா ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் அரை சதம் கடந்தனர். மேட் ரென்ஷா 74 ரன்களும், கேமரூன் கிரீன் 65 ரன்களும் சேர்த்து அவுட்டாயினர்.
2-ம் நாள் ஆட்டநேர இறுதியில் ஜோஷ் இங்லிஸ் 85 ரன்களும், அலெக்ஸ் கேரி 51 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.