

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘பி’ பிரிவில் முனனாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் ஓமன், அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்த ஓர் பார்வை...
ஆஸ்திரேலியா: 2021-ம் ஆண்டு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி மிட்செல் மார்ஷ் தலைமையில் களமிறங்குகிறது. முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகல், சீனியர் வீரர்கள் ஓய்வு ஆகியவற்றை கடந்து அந்த அணி மீண்டும் மகுடம் சூடும் முனைப்புடன் களமிறங்குகிறது.
ஆஸ்திரேலிய அணி 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் விளையாடிய 24 ஆட்டங்களில் 17-ல் வெற்றி கண்டுள்ளது. கடந்த வாரம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இருதரப்பு டி 20 தொடரை 0-3 என முழுமையாக இழந்திருந்தது. இதனால் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் அந்த அணி கடும் சவால்களை சந்திக்கக்கூடும்.
முன்னணி இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அதேவேளையில் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை. இதுதவிர ஜோஷ் ஹேசில்வுட் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் தொடக்க ஆட்டங்களில் விளையாட முடியாத நிலை உள்ளது.
வேகப்பந்து வீச்சு துறையில் நேதன் எல்லிஸ், பென் டுவார்ஷூயிஸ், சேவியர் பார்ட்லெட் போன்ற வீரர்கள் தரம் குறைந்தவர்கள் கிடையாதுதான். ஆனால் இவர்களிடம் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோரிடம் காணப்படும் திறன்களும் ஆளுமையும் இல்லை. சுழற்பந்து வீச்சில் அனுபவம் வாய்ந்த ஆடம் ஜாம்பா பலம் சேர்க்கக்கூடும்.
அவருக்கு உறுதுணையாக கிளென் மேக்ஸ்வெல், மேட்குனேமன், கூப்பர் கானோலி ஆகியோர் செயல்படக்கூடும். ஆனால், இந்தத் தொடர் முழுவதும் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு தாக்குதல் சுமையை இவர்களால் தங்கள் தோள்களில் சுமக்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.
மாறாக ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசை மிகவும் சீராகக் காணப்படுகிறது. டாப் ஆர்டரில் வலுவான தொடக்கம் கொடுக்கக்கூடிய திறன் கொண்ட டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். இவர்களுடன் கிளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்லிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரும் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர்கள்.
வலுவான பேட்டிங்கை குழுவை ஆஸ்திரேலியா கொண்டிருந்தாலும் அந்த அணிக்கு லீக் சுற்று கடினமாக இருக்கக்கூடும். ஏனெனில் அந்த அணி லீக் சுற்றில் தனது 4 ஆட்டங்களையும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இலங்கை ஆடுகளங்களில் விளையாடுகிறது. அதிலும் பல்லேகலே மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்களைத் திறமையாகச் சமாளிக்க வேண்டும்.
பிக்பாஷ் டி20 தொடரில் அதிரடியாக விளையாடிய சீனியர் பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித்துக்கு அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. எனினும் அவர், மாற்று வீரர்களின் பட்டியலில் உள்ளார். ஸ்மித்துக்கு பதிலாக மேட் ரென்ஷாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிரடி வீரரான டிம் டேவிட் தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. ஒருவேளை அவர், விளையாட முடியாத நிலை உருவானால் ஸ்டீவ் ஸ்மித் அணிக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது.
அணி விவரம்: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ ரென்ஷா, டிம் டேவிட், கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ குனேமன், கூப்பர் கானோலி, ஆடம் ஜாம்பா, பென் டுவார்ஷூயிஸ், சேவியர் பார்லெட், நேதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட்.
ஆஸ்திரேலிய அணி
ஆஸி. மோதல் விவரம்:
பிப்.11 அயர்லாந்து, கொழும்பு
பிப்.13 ஜிம்பாப்வே, கொழும்பு
பிப்.16 இலங்கை, பல்லேகலே
பிப்.20 ஓமன், பல்லேகலே
அயர்லாந்து
2007-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரை தவிர மற்ற அனைத்து உலகக் கோப்பை தொடர்களிலும் அயர்லாந்து அணி பங்கேற்றுள்ளது. இம்முறை அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் முனைப்பு காட்டக்கூடும். அயர்லாந்து அணி கடைசியாக 2022-ம் ஆண்டு தொடரில் லீக் சுற்றை கடந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தது. அந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியை சூப்பர் 6 சுற்றில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்திருந்தது.
வழக்கம் போன்று பால் ஸ்டிர்லிங்கே கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார். அவருடன் அனுபவம் வாய்ந்த வீரர்களாக சுழற்பந்து வீச்சாளர் ஜார்ஜ் டாக்ரேல், விக்கெட் கீப்பர் லார்கன் டக்கர் உள்ளனர். வேகப்பந்து வீச்சில் ஜோஷ் லிட்டில் பலம் சேர்க்கக்கூடும். சுழலில் 23 வயதான மேத்யூ ஹம்ப்ரேஸ் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலி அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.
ஓமன்
ஓமன் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் 4-வது முறையாக களமிறங்குகிறது. அந்த அணி ஆசியா மற்றும் கிழக்கு ஆசிய-பசிபிக் தகுதி சுற்றில் சிறப்பாக செயல்பட்டு உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. 2024-ம் ஆண்டு தொடரில் அந்த அணி லீக் சுற்றில் ஒரு வெற்றியை கூட பெறவில்லை. அதேவேளையில் 2016 மற்றும் 2021-ம் ஆண்டு தொடர்களில் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்தது. இதில் 2016 அறிமுக தொடரில் அயர்லாந்து அணியை வீழ்த்தியிருந்தது.
ஜதிந்தர் சிங்
பேட்டிங்கில் தொடக்க வீரரும் கேப்டனுமான ஜதிந்தர் சிங், விக்கெட் கீப்பர் விநாயக் சுக்லா ஆகியோர் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். பந்துவீச்சில் ஜிதேன் ராமநந்தி, சுஃப்யான் மெஹ்மூத், நதீம் கான் ஆகியோர் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர். 44 வயதான அமிர் கலீம், 43 வயதான முகமது நதீம் ஆகியோர் இந்தத் தொடரில் அதிக வயதுடைய வீரர்களாக களமிறங்குகின்றனர்.
இலங்கை
2014-ம் ஆண்டு சாம்பியனான இலங்கை அணி இம்முறை ஆல்ரவுண்டரான தசன் ஷனகா தலைமையில் களமிறங்குகிறது. இலங்கை அணி டி 20 உலகக் கோப்பையில் முதல் 5 தொடர்களில் 3 முறை இறுதிப் போட்டியிலும், ஒரு முறை அரை இறுதிப் போட்டியிலும் கால்பதித்து இருந்தது.
எனினும் கடந்த 10 ஆண்டுகளில் அந்த அணி வெற்றிகளை பெற தடுமாறி வருகிறது. 2024-ம் ஆண்டு தொடரில் இலங்கை அணி லீக் சுற்றில் தென் ஆப்பிரிக்கா, வங்கதேசத்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இலங்கை அணியின் மோசமான செயல் திறனாக அது அமைந்திருந்தது.
இலங்கை அணி
இம்முறை அந்த அணி தனது பெரும்பாலான ஆட்டங்களை சொந்த மண்ணில் விளையாடுவது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் வனிந்து ஹசரங்கா, பதிரனா, துஷ்மந்தா சமீரா ஆகியோர் வலுவாக திகழ்கின்றனர். பேட்டிங்கில் பதும் நிஷங்கா, அனுபவம் வாய்ந்த குஷால் மெண்டிஸ் பலம் சேர்க்கக்கூடும்.
ஜிம்பாப்வே
ஜிம்பாப்வே அணி கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை. தற்போது 2 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த அணி உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ளது. கேப்டன் சிக்கந்தர் ராசா, விக்கெட் கீப்பர் பிரெண்டன் டெய்லர் போன்ற பல பரிச்சயமான முகங்கள் அணியில் இருந்தாலும், ஜிம்பாப்வே அணி ஆப்பிரிக்கத் தகுதிச்சுற்றில் வெற்றி பெறுவதில் 22 வயதான பிரையன் பென்னட்டே முக்கியப் பங்கு வகித்திருந்தார். தகுதி சுற்றில் அவர், ஒரு சதம், 3 அரை சதங்கள் விளாசியிருந்தார்.
மேலும் கடந்த ஆண்டு நவம்பரில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் கலந்துகொண்ட முத்தரப்பு டி 20 தொடரிலும் சிறந்த செயல் திறனை பிரையன் பென்னட் வெளிப்படுத்தியிருந்தார். இதனால் அவர், மீது எதிர்பார்ப்பு உள்ளது. 2022-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்த ஜிம்பாப்வே அணி இம்முறை தொடக்க ஆட்டத்தில் ஓமன் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவதில் கவனம் செலுத்தக்கூடும்.