

அடிலெய்டு: ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து தொடரை 3-0 என்ற கணக்கில் அந்த அணி கைப்பற்றியது. ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி 3-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 371 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அலெக்ஸ் கேரி 106, உஸ்மான் கவாஜா 82, மிட்செல் ஸ்டார்க் 54 ரன்கள் குவித்தனர்.
இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் 5, பிரைடன் கார்க்ஸ், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா 2, ஜோஷ் டங் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜாக் கிராவ்லி 9, பென் டக்கெட் 29, ஜோ ரூட் 19, ஹாரி புரூக் 45, பென் ஸ்டோக்ஸ் 83, ஜேமி ஸ்மித் 22 ரன்கள் சேர்த்தனர்.
ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், போலண்ட் ஆகியோர் தலா 3, நேதன் லயன் 2, கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 349 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. டிராவிஸ் ஹெட் 170, உஸ்மான் கவாஜா 40, அலெக்ஸ் கேரி 72 ரன்களை விளாசினர்.
இங்கிலாந்தின் ஜோஷ் டங் 4, பிரைடன் கார்ஸ் 3, ஜோப்ரா ஆர்ச்சர், வில் ஜேக்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து 435 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி 2-ம் இன்னிங்ஸில் களமிறங்கியது.
4-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி, 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்திருந்தது. ஜாக் கிராவ்லி 85, பென் டக்கெட் 4, ஆலி போப் 17, ஜோ ரூட் 39, ஹாரி புரூக் 30, பென் ஸ்டோக்ஸ் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்நிலையில் கடைசி நாள் ஆட்டத்தை ஜேமி ஸ்மித் 2 ரன்களுடனும், வில் ஜேக்ஸ் 11 ரன்களுடனும் தொடங்கினர்.
இருவரும் நிதானத்துடன் விளையாடி ரன்களைச் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த இந்த ஜோடியை மிட்செல் ஸ்டார்க் பிரித்தார். அரை சதம் விளாசி அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த ஜேமி ஸ்மித் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். 7-வது விக்கெட்டுக்கு ஜேமி ஸ்மித், வில் ஜேக்ஸ் ஜோடி 95 ரன்கள் குவித்தது. இதையடுத்து களம்புகுந்த பிரைடன் கார்ஸ், வில் ஜேக்ஸுடன் இணைந்து ரன்களைக் குவிக்க முயன்றார்.
ஆனால் வில் ஜேக்ஸ் 47 ரன்களில் வீழ்ந்தார். ஜோப்ரா ஆர்ச்சரை 3 ரன்களில் மிட்செல் ஸ்டார்க் வீழ்த்தினார். ஜோஷ் டங்கை ஒரு ரன்னில் ஸ்காட் போலண்ட் சாய்க்க இங்கிலாந்து அணியின் 2-வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
102.5 ஓவர்களில் 352 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது. பிரைடன் கார்ஸ் மட்டும் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், நேதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். ஸ்காட் போலண்ட் ஒரு விக்கெட்டை எடுத்தார்.
இதையடுத்து 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் இந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும் அந்த அணி கைப்பற்றியுள்ளது. ஆட்டநாயகன் விருதை அலெக்ஸ் கேரி வென்றார். அலெக்ஸ் கேரி முதல் இன்னிங்ஸில் 106 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 72 ரன்களும் குவித்திருந்தார்.
4-வது டெஸ்ட் போட்டி: இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி மெல்பர்ன் மைதானத்தில் தொடங்கவுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் இந்த போட்டி தொடங்கவுள்ளதால் இது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்று அழைக்கப்படும்.