இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக அகிப் நபி சேர்ப்பு

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக அகிப் நபி சேர்ப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக விலகி உள்ள ஜஸ்பிரீத் பும்ராவுக்கு பதிலாக ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான அகிப் நபி சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஜம்மு & காஷ்மீரில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் வீரர் என்ற பெருமையை அகிப் நபி பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி காலே சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பு நகரில் 23-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா சேர்க்கப்பட்டு இருந்தார். எனினும் அவர், உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரின் போது பும்ராவுக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டு இருந்தது. இந்த காயம் முழுமையாக குணமடையாததால் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து பும்ரா விலகி உள்ளார்.

இந்நிலையில் அவருக்கு பதிலாக ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான அகிப் நபி சேர்க்கப்பட்டுள்ளார்.

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்த 29 வயதான அகிப் நபி, ஜம்மு & காஷ்மீரில் இருந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்படும் முதல் வீரர் ஆவார். இதற்கு முன்னர் ஜம்மு & காஷ்மீரில் இருந்து பர்வேஷ் ரசூல், உம்ரான் மாலிக் ஆகியோர் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டி, டி20 கிரிக்கெட்டில் விளையாடி உள்ளனர்.

அகிப் நபி கடந்த இரு ரஞ்சி டிராபி சீசனில் 104 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதில் 2025-26-ம் ஆண்டு சீசனில் மட்டும் 60 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஜம்மு & காஷ்மீர் அணி தனது முதலாவது ரஞ்சி கோப்பை தொடரை வெல்வதில் முக்கியப் பங்காற்றினார்.

இவர், பேட்டிங்கிலும் கைகொடுக்கக்கூடியவர். சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ‘ஏ’ அணியில் இடம் பெற்றிருந்த அகிப் நபி அங்கு நடைபெற்ற இரண்டு முதல்தரப் போட்டிகளில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக அகிப் நபி சேர்ப்பு
2030-ல் அகமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான கொடி இந்தியாவிடம் ஒப்படைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in