

நகோயா: ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷ் ஆடவர் பிரிவில் இந்தியாவின் அபய் சிங்கும், மகளிர் பிரிவில் அனஹத் சிங்கும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 10-ம் நாளான நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் அபய் சிங்கும், மலேசியாவின் நிக் எய்ன் யோவும் மோதினர். இதில் அபய் சிங் 9-11, 5-11, 5-11 என்ற புள்ளிகள் கணக்கில் நிக் எய்ன் யோவிடம் தோல்வி கண்டார். இதையடுத்து நிக் எய்ன் யோவுக்கு தங்கமும், அபய் சிங்குக்கு வெள்ளியும் கிடைத்தது.
இந்திய வீரர் அபய் சிங் தமிழகத்தில் பிறந்து சென்னை குருநானக் கல்லூரியில் படித்தவர். தற்போது, டெல்லியில் வசித்து வருகிறார். ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய வீரர் வெல்லும் 2-வது வெள்ளிப் பதக்கமாகும் இது. இதற்கு முன்பு 2023-ல் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷல் வெள்ளி வென்றிருந்தார்.
மேலும், இந்தப் போட்டியில் தங்கம் வென்றிருந்தால் வரும் 2028-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக அபய் சிங் தகுதி பெற்றிருப்பார். ஆனால் இறுதிச் சுற்றில் அபய் சிங் தோல்வி கண்டதன் மூலம் ஒலிம்ப்பிக்கில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார்.
மகளிர் பிரிவு
மகளிர் பிரிவு இறுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை அனஹத் சிங்கும், மலேசிய வீராங்கனை சிவசங்கரி சுப்பிரமணியமும் மோதினர்.
இதில் அனஹத் சிங் 4-11, 4-11, 7-11 என்ற கணக்கில் சிவசங்கரி சுப்பிரமணியத்திடம் தோல்வி கண்டு 2-ம் இடம் பெற்றதன் மூலம் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். முதலிடம் பிடித்த சிவசங்கரிக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வெல்லும் 14-வது வெள்ளிப் பதக்கமாக இது அமைந்தது.
மேலும் இந்தப் போட்டியில் அனஹத் சிங் தங்கம் வென்றிருந்தால் வரும் 2028-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றிருப்பார். ஆனால் இறுதிப் போட்டியில் அனஹத் சிங் தோல்வி கண்டதன் மூலம் ஒலிம்பிக்கில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். ஸ்குவாஷ் போட்டியின் தனிநபர் பிரிவில் 2 தங்கம் கிடைக்கும் என காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்தது.
ஹரிதாவுக்கு வெண்கலம்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹரிதா பத்ரா வெண்கலம் வென்று அசத்தினார். நகோயாவில் நேற்று நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் பந்தய இறுதிச் சுற்றில் ஹரிதா பத்ரா 23.20 விநாடிகளில் ஓடிவந்து 3-வது இடம் பிடித்து வெண்கலத்தைக் கைப்பற்றினார். இதே பிரிவில் சிங்கப்பூரின் சாந்தி பெரைரா தங்கமும் (22.78 விநாடிகள்), சீன வீராங்கனை சென் யுஜி வெள்ளியும் (22.93 விநாடிகள்) வென்றனர்.
இந்திய அணிகள் முன்னேற்றம்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் வில்வித்தைப் பிரிவு அரை இறுதிக்கு இந்திய ஆடவர், மகளிர் அணிகள் முன்னேறியுள்ளன.
நேற்று நடைபெற்ற ஆடவர் ரீகர்வ் அணி பிரிவு கால் இறுதிப் போட்டியில் இந்திய அணி 5-1 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. அதேபோல் மகளிர் அணி ரீகர்வ் பிரிவில் இந்திய அணி 6-0 என்ற கணக்கில் சீன தைபே அணியை தோற்கடித்து அரை இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. மேலும், ரீகர்வ் கலப்பு அணிப் பிரிவில் இந்திய அணி 6-0 என்ற கணக்கில் வியட்நாமை சாய்த்தது. காம்பவுண்ட் கலப்பு அணிகள் கால் இறுதிப் பிரிவில் சாஹில் ஜாதவ், சிகிதா தனிபர்த்தி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 159-154 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தான் அணியை வென்றது.
சிந்து, உன்னதி தோல்வி
ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிச் சுற்றில் இந்திய பாட்மிண்டன் வீராங்கனைகள் பி.வி.சந்து, உன்னதி ஹூடா ஆகியோர் தோல்வி கண்டனர். நேற்று நடைபெற்ற போட்டியில், பி.வி.சிந்து 21-11, 18-21, 10-21 என்ற செட் கணக்கில் சென் யூ பெய்யிடம்(சீனா) தோல்வி கண்டு வெளியேறினார். மற்றொரு கால் இறுதிப் போட்டியில் அகானே யமாகுச்சியிடம்(ஜப்பான்) 21-16, 14-21, 21-17 என்ற கணக்கில் உன்னதி ஹூடா வீழ்ந்தார்.அதேபோல் மகளிர் இரட்டையர் கால் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 18-21, 9-21என்ற செட் கணக்கில் மலேசியாவின் பியர்லி டான், தின்னா முரளிதரன் ஜோடியிடம் வீழ்ந்து வெளியேறியது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 14-21, 21-18, 18-21 என்ற செட் கணக்கில் சீனாவின் பெங் யான் ஜீ, ஹூவாங் டாங்பிங் ஜோடியிடம் தோல்வி கண்டது.
இறுதிச் சுற்றில் சங்கர் முரளி
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் நீளம் தாண்டுதல் பிரிவு இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சங்கர் முரளி, டேவிட் சாலமன் ஆகியோர் முன்னேறியுள்ளனர். இதேபோல் மகளிர் 400 மீட்டர் தடை ஓட்ட இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் வித்யா ராம்ராஜ், அனு ராகவன் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்ட இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர் சந்தோஷ்குமார் தமிழரசன் தகுதி பெற்றுள்ளார்.
பர்வீனுக்கு பதக்கம் உறுதி
ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா, வீரர்கள் அங்குஷ் பங்கால், நரேந்தர் பெர்வால் ஆகியோருக்கு. மகளிர் 65 கிலோ பிரிவு போட்டியில் பர்வீன் ஹூடா 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நவ்பகோரை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். அதேபோல் ஆடவர் 80 கிலோ பிரிவில் இந்திய வீரர் அங்குஷ் பங்கால் அரை இறுதிக்கு முன்னேறி வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். கால் இறுதிப் போட்டியில் அங்குஷ் பங்கால் 5-0 என்ற கணக்கில் தஜிகிஸ்தான் வீரர் நெக்ருஸ் சலிமோவை வீழ்த்தினார்.
ஆடவர் +90 கிலோ பிரிவில் இந்திய வீரர் நரேந்தர் பெர்வால் கால் இறுதியில் தாய்லாந்து வீரர் அட்தபோங் செங்டேப்பை தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறினார்.இதன்மூலம் பர்வீன் ஹூடா, அங்குஷ் பங்கால், நரேந்தர் பெர்வால் ஆகியோருக்கு குறைந்தது வெண்கலப் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
அன்சி சோஜனுக்கு வெள்ளிப் பதக்கம்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அன்சி சோஜன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். அவர் 6.53 மீட்டர் நீளம் தாண்டி 2-வது இடம் பிடித்தார். சீனாவின் ஹுவாங் இங்யிங் தங்கமும் (6.55 மீ.), சீனாவின் எம்.தான் வெண்கலமும் (6.46 மீ.) வென்றனர்.
வெண்கலம் வென்றார் பாருல் சவுத்ரி
ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 9:08.67 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலம் வென்றார். பஹ்ரைன் வீராங்கனை வின்பிரெட் யாவி (9:04.36 விநாடிககள்) தங்கமும், கஜகஸ்தானின் நோரா ஜெருடோ தனுஷ் (9:06.82 விநாடிகள்) வெள்ளியும் வென்றனர்.
டெகத்லானில் தேஜஸ்வினுக்கு வெண்கலம்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் டெகத்லான் போட்டியில் 3-வது இடம் பிடித்த இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் 7,934 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.
ஜப்பானின் யுமா மருயுமா 8,123 புள்ளிகளுடன் தங்கமும், சீனாவின் ஜிங்யுவா சென் வெள்ளியும் வென்றனர்.
பளுதூக்குதல் போட்டி ஹர்ஜிந்தருக்கு 9-வது இடம்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் 69 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை ஹர்ஜிந்தர் கவுர் 9-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். காமன்வெல்த் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றவரான ஹர்ஜிந்தர், ஸ்னாட்சில் 94 கிலோவும், ஜெர்க்கில் 110 கிலோவும் என மொத்தம் 204 கிலோ மட்டுமே தூக்கி 9-வது இடம் பிடித்தார்.
உயரம் தாண்டுதலில் சர்வேஷுக்கு வெள்ளி
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் சர்வேஷ் குஷாரே 2.25 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். சீன தைபே வீரர் பூ சி தங்கப் பதக்கத்தையும், கொரிய வீரர் வூ சாங்யோக் வெண்கலமும் வென்றனர்.
சிங்கப்பூரை வீழ்த்திய இந்திய மகளிர் அணி
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தியது. நேற்று நடைபெற்ற பி பிரிவு போட்டியில் இந்திய அணி சார்பில் சலிமா டெட்டே (17-வது நிமிடம்), சுனேலிதா (22, 24-வது நிமிடங்கள்), லால்ரெம்சியாமி (26-வது நிமிடம்), ருதுஜா டடோசா பிசால் (29-வது நிமிடம்), நிக்கி பிரதான் (35-வது நிமிடம்), தீபிகா (55-வது நிமிடம்) ஆகியோர் கோலடித்தனர். நாளை நடைபெறும் அரை இறுதியில் இந்திய, கொரிய மகளிர் அணிகள் மோதவுள்ளன.