

துபாய்: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்து இருந்தது. இந்த போட்டியில் நியூஸிலாந்து அணியின் பேட்டிங்கின் போது 11-வது ஓவரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வீசியிருந்தார்.
இதன் ஓவரின் 4-வது பந்தை நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன் டேரில் மிட்செல் அடித்த போது பந்து அர்ஷ்தீப் வசம் வந்தது. அப்போது பந்தை எடுத்த அவர், ஆக்ரோஷமாக ஸ்டெம்புகளை நோக்கி வீசிய போது டேரில் மிட்செல் மீது பலமாக பட்டது.
ஸ்டெம்புகளை விட்டு விலகி நின்றிருந்த போதும் அர்ஷ்தீப் சிங், தன் மீது பந்தை எறிந்ததால் ஆத்திரம் அடைந்த டேரில் மிட்செல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். களநடுவரும், கேப்டன் சூர்யகுமார் யாதவும் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஐசிசி-யின் நன்னடத்தை விதிகளை மீறியதாக அர்ஷ்தீப் சிங்குக்கு போட்டியின் ஊதியத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தகுதியிழப்பு புள்ளியும் அர்ஷ்தீப் சிங்குக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.