

புதுடெல்லி: காயத்ரி கோபிசந்த், திவ்யா தேஷ்முக், விதித் குஜ்ராத்தி உட்பட 17 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருதை மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.
விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருதும், ‘மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா’ விருதும், பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும் மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று, மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் 2025-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை அறிவித்தது. இதில் 17 விளையாட்டு வீரர்கள் அர்ஜுனா விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்த ஆண்டு ‘மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா’ விருதுக்கு எந்த விளையாட்டு வீரரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் குமார் மிஸ்ரா தலைமையிலான தேர்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டன. அந்தவகையில், அர்ஜுனா விருதுக்காகத் தேர்வுக் குழு முதலில் 24 பேர் கொண்ட பட்டியலை முன்மொழிந்திருந்தது, ஆனால் அமைச்சகம் 17 பேருக்கு மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது.
தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர், வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி, செஸ் வீரர் விதித் குஜராத்தி, வீராங்கனை திவ்யா தேஷ்முக் உள்ளிட்டோருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்நாள் சாதனைக்கான அர்ஜுனா விருது தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர் ஐ.அருமைநாயகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுனா விருதுகள் பெறுவோர் விவரம்:
தேஜஸ்வின் சங்கர் (தடகளம்), பிரியங்கா கோஸ்வாமி (தடகளம்), நரேந்தர் (குத்துச்சண்டை), விதித் குஜராத்தி (செஸ்), திவ்யா தேஷ்முக் (செஸ்), தனுஷ் காந்த் (பாரா- துப்பாக்கி சுடுதல்), ராஜ்குமார் பால் (ஹாக்கி), சுர்ஜீத் (கபாடி), ருத்ராம்ஷ் கந்தேல்வால் (பாரா-துப்பாக்கி சுடுதல்), ஏக்தா பயான் (பாரா-தடகளம்), அரவிந்த் சிங் (துடுப்புப் படகுப் போட்டி), அகில் ஷியோரன் (துப்பாக்கி சுடுதல்), ட்ரீசா ஜாலி (பாட்மிண்டன்), காயத்ரி கோபிசந்த் (பாட்மிண்டன்), லால்ரெம்சியாமி (ஹாக்கி), முகமது அஜ்மல் (தடகளம்), பூஜா (கபடி).
அர்ஜுனா விருது (வாழ்நாள் சாதனை): ஐ.அருமைநாயகம் (கால்பந்து).
துரோணாச்சார்யா விருது: பர்வீர் சிங், சோட்டே லால் யாதவ், நேஹா சவான்.
துரோணாச்சார்யா விருது (வாழ்நாள் சாதனை): தர்மேந்திர யாதவ், வீரேந்தர் குமார்.