

மியாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து ரவுண்ட் 32-ன் மற்றொரு ஆட்டத்தில் அர்ஜெண்டினாவுக்கு செம டஃப் ஃபைட் கொடுத்த கேப் வெர்டே அணி கடைசியில் ஓன் கோலினால் பின்னடைவு கண்டது.
அர்ஜெண்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ரவுண்ட் 16-க்கு தகுதி பெற்றது. இது ஓர் அதிர்ஷ்ட வெற்றி. ஏனெனில் அர்ஜெண்டினாவின் வெற்றி கோல் கேப் வெர்டேயின் ஓன் கோல் என்பதாலேயே.
நடப்பு உலக சாம்பியனான அர்ஜெண்டினா அணி எதிர்பாராத விதமாக கடுமையாக போராடிய கேப் வெர்டே அணியை கூடுதல் நேரம் வரை சந்தித்து, இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அர்ஜெண்டினாவும், 67-வது இடத்தில் உள்ள கேப் வெர்டேயும் மோதிய இந்த ஆட்டம் உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றின் மிகப்பெரிய அதிர்ச்சிகளில் ஒன்றாக மாறும் நிலையில் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அர்ஜெண்டினா தப்பித்துக் கொண்டது.
29-வது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸி அற்புதமான கோலுடன் அர்ஜெண்டினாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். லிசாண்ட்ரோ மார்டினஸ் வழங்கிய லாங் பந்தை மெஸ்ஸி தனது இடது காலின் வெளிப்புற பகுதியால் அசத்தலாக கட்டுப்படுத்தி, முன்னே வந்த கோல்கீப்பர் வோசின்ஹாவை ஏமாற்றி கோல் அடித்தார். இதன் மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ந்து எட்டு ஆட்டங்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார்.
ஆனால் 59-வது நிமிடத்தில் டெராய் டுவார்டே துல்லியமான ஷாட்டின் மூலம் கேப் வெர்டேவுக்காக சமநிலை கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டம் 1-1 என முடிவடைந்து கூடுதல் நேரத்துக்குச் சென்றது.
கூடுதல் நேரத்தின் தொடக்கத்தில் மெஸ்ஸியின் கார்னர் கிக்கிலிருந்து வந்த வாய்ப்பை பயன்படுத்திய லிசாண்ட்ரோ மார்டினஸ் சக்திவாய்ந்த ஷாட்டில் கோல் அடித்து அர்ஜெண்டினாவை மீண்டும் முன்னிலைக்கு கொண்டு வந்தார். எனினும், 103-வது நிமிடத்தில் இடதுபுறத்தில் இருந்து உள்ளே நுழைந்த சிட்னி லோப்ஸ் கப்ரால் அற்புதமான கர்லிங் ஷாட்டில் கோல் அடித்து கேப் வெர்டேவுக்கு மீண்டும் சமநிலையை ஏற்படுத்தினார். இந்த கோல் இந்த உலகக் கோப்பையின் அற்புத கோல்களில் ஒன்றாகும்.
அர்ஜெண்டினாவுக்கு கிடைத்த ஓன் கோல் அதிர்ஷ்டம்: கேப் வெர்டேயின் துரதிர்ஷ்டம்
பெனால்டி ஷூட் அவுட் நெருங்கிய நிலையில், 111-வது நிமிடத்தில் மெஸ்ஸி எடுத்த செட்-பீஸ் (அனைவரையும் நிற்க வைத்து அளிக்கப்படும் ஃப்ரீ கிக்) பந்தை தடுக்க முயன்ற டினேய் போர்ஜஸ், கிறிஸ்டியன் ரோமெரோவுடன் போட்டியிட்டபோது தவறுதலாக தனது அணியின் கோல் வலையிலேயே தள்ளினார். அந்த சுய கோலே அர்ஜெண்டினாவின் வெற்றிக் கோலாக அமைந்தது.
போட்டியின் இறுதி நிமிடங்களிலும் கேப் வெர்டே சமநிலை கோலைத் தேடியது. ஆனால் அர்ஜெண்டினா கோல்கீப்பர் எமிலியானொ மார்ட்டினேஸ் இரண்டு முக்கியமான சேவ்களை செய்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி இதுவரை 7 கோல்கள் அடித்துள்ளார். இதன் மூலம் கோல்டன் பூட் விருதுக்கான போட்டியில் 6 கோல்கள் கொண்ட கிலியன் எம்பாப்பேவை முந்தி முன்னிலை வகிக்கிறார். மேலும் கடந்த எட்டு உலகக் கோப்பை போட்டிகளில் மெஸ்ஸி 12 கோல்கள் அடித்துள்ளார்.
இது மெஸ்ஸியின் 30-வது உலகக் கோப்பை ஆட்டமாகும். இதன் மூலம் ஆண்கள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற தனது சாதனையை அவர் மேலும் நீட்டித்தார். இந்தப் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 26 போட்டிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.