

புதுடெல்லி: ஆடவருக்கான யு-19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் முன்னாள் வீரர்களான ராகுல் திராவிட்டின் மகன் அன்வய் திராவிட், வீரேந்தர் சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆடவருக்கான யு-19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி மஸ்கட்டில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் அண்மையில் நிறைவடைந்த வினு மன்கட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ராகுல் திராவிட்டின் மகன் அன்வய், சேவாக்கின் மகன் ஆர்யவீர் ஆகியோரது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
குஜராத்துக்கு எதிரான போட்டியில் கர்நாடக வீரர் அன்வய் 100 பந்துகளில் 151 ரன்கள் விளாசியிருந்தார். வினு மன்கட் போட்டியில், விஜயநகரில் நடைபெற்ற சண்டிகருக்கு எதிரான போட்டியில் ஆர்யவீர் சேவாக் 143 பந்துகளில் 173 ரன்களை விளாசி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்திய யு 19 அணி: லக்சயா ராய்சந்தனி (கேப்டன்), ஆர்யவீர் சேவாக், வி.கே.வினீத், யஷ்பர்தன் சிங் சவுகான், குஷாக்ரா ஓஜா, அர்ஜுன் ராஜ்புத், மனல் சவுகான், அன்வய் திராவிட், ரஜத் பாகேல், வி.யஷ்வீர், ஆர்யன் சாவ்சானி, காவ்யா படேல், மோஹித் உல்வா, ஷாவின் வினோத், இஷான் சூட்.