

அனஹத் சிங்
ஆன்டாரியோ: உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்தியாவின் அனஹத் சிங்.
கனடாவின் ஆன்டாரியோவில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவில் இறுதிப் போட்டியில் எகிப்தின் ருகையா சலீம் உடன் அனஹத் சிங் பலப்பரீட்சை செய்தார்.
இந்த மோதலில் உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனஹத் சிங் 11-3, 11-7, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.
உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரின் போட்டியில் 21 வருடங்களுக்குப் பிறகு கால்பதித்த இந்தியர் என்ற சாதனையை அனஹத் சிங் படைத்துள்ளார். கடைசியாக 2005-ம் ஆண்டு தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அனஹத் படைத்துள்ளார்.
கடந்த 2011 முதல் எகிப்து நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் மட்டுமே இந்த தொடரில் பட்டம் வென்று வந்தனர். அதனை இப்போது அனஹத் தகர்த்துள்ளார்.
இறுதிப் போட்டிக்கு முன்பாக அனஹத் சிங் கூறியதாவது: “நான்கு உலக ஜூனியர் போட்டிகளில் விளையாடி காலிறுதி மற்றும் அரையிறுதி சுற்றுகளில் தோல்வியடைந்திருக்கிறேன். அதனால் இம்முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருப்பது எனது பெற்றோருக்கும் பயிற்சியாளர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, ஆனால் இந்தத் தொடர் இன்னும் முடிவடையவில்லை” என்றார். இப்போது சாம்பியன் பட்டம் வென்று தொடரை நிறைவு செய்துள்ளார்.