“தோனி, கோலிக்கு பிறகு ரசிகர்களின் ‘டார்லிங்’ சஞ்சு சாம்சன் தான்” - தினேஷ் கார்த்திக்

“தோனி, கோலிக்கு பிறகு ரசிகர்களின் ‘டார்லிங்’ சஞ்சு சாம்சன் தான்” - தினேஷ் கார்த்திக்
Updated on
1 min read

தோனி, கோலி, ரோஹித் சர்மாவுக்குப் பிறகு இந்திய ரசிகர்கள் அதிகம் விரும்பக்கூடிய வீரராக சஞ்சு சாம்சன் இருக்கிறார் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் 97 ரன்களை அனாயசமாக எடுத்து வெற்றி பெற்றுக் கொடுத்ததையடுத்து சோஷியல் மீடியாவில் ரசிகர்களும் கிரிக்கெட் நிபுணர்களும் சஞ்சுவை விதந்தோதி வருகின்றனர்.

உலகக்கோப்பைக்கு முன்பு சஞ்சு சாம்சன் இந்திய அணியின் திட்டமிடல்களில் இல்லை. ஆனால் இந்திய அணியின் மேல் வரிசையில் இருந்த இடதுகை பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவில் விளையாடாததால், சாம்சனுக்கு மீண்டும் தொடக்க இடம் வழங்கப்பட்டது. அதனால் திலக் வர்மா ஐந்தாவது இடத்துக்கு மாற்றப்பட்டார்; இஷான் கிஷன் மூன்றாவது இடத்தில் விளையாடினார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் சாம்சன் அதிரடி தொடக்கம் கொடுத்தாலும் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியவில்லை. ஆனால் மிக முக்கியமான தருணத்தில் வாழ்க்கையின் சிறந்த இன்னிங்ஸை ஆடி, இந்திய அணிக்கும் தனது கிரிக்கெட் கரியருக்கும் சாதகம் செய்து கொண்டார். அவரது சக்திவாய்ந்த ஆட்டம் மூலம் இந்தியா வெஸ்ட் இண்டீஸை நெருக்கடியான முறையில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இதனையடுத்து தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சனை இந்திய லெஜண்ட்களுடன் ஒப்பிட்டு புகழின் உச்சத்தில் வைத்து பாராட்டியுள்ளார். ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:

“சஞ்சு சாம்சன் ஓர் அருமையான கதை. ஆம் நான் அப்படித்தான் உணர்கிறேன், அந்த ஆச்சரியமான இன்னிங்ஸிற்குப் பிறகே எப்போதும் அவர் ஓர் அவிழ்க்கப்பட முடியா புதிர் என்ற என் எண்ணத்தை வலுப்படுத்துவதாகவே அமைந்தது. மக்கள் அவரை நேசிக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் அவர்தான் இன்று ரசிகர்களால் அதிகம் நேசிக்கப்படும் வீரராக இருக்கிறார்.

விராட் கோலி, தோனி, ரோஹித் சர்மா போல் சஞ்சுவுக்கும் அந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் தன்னை எப்படி நடத்திக்கொள்கிறார் என்பதில் தான் அந்தச் தனிச்சிறப்பு இருக்கிறது.

அவர் நிறைய ஏற்றத் தாழ்வுகளை பார்த்திருக்கிறார். அவர் மிகுந்த திறமைசாலி என்றாலும், அவர்மீது இருந்த எதிர்பார்ப்புகளின் சுமையும் அழுத்தமும் எளிதாக இல்லை. அந்த நாள், அந்த மைதானத்தில், கடந்த மூன்று மாதங்களில் அவர் எதிர்கொண்ட விஷயங்களுக்குப் பிறகு, அவரை கிட்டத்தட்ட தள்ளி வைத்து அணியில் சேர்த்தார்கள். ஆனால் அவர் கொல்கத்தாவில் செய்தது என்னவென்பதை நாமே அன்று பார்த்தோம்,”

இவ்வாறு கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

“தோனி, கோலிக்கு பிறகு ரசிகர்களின் ‘டார்லிங்’ சஞ்சு சாம்சன் தான்” - தினேஷ் கார்த்திக்
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதாக நிதிஷ் குமார் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in