

அல் அமெரட்: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை 2026 தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராகக் காயத்தையும் பொருட்படுத்தாமல் அரைசதம் அடித்த 15 வயது இளம் தொடக்க வீரர் ஆர்யவீர் சேவாக், 'தொடர் நாயகன்' விருதை வென்றுள்ளார்.
இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்தவுடன் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பாணியில் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாகிஸ்தான் நிர்ணயித்த 338 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கிய நிலையில், தொடக்கத்திலேயே பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அலி ரசா வீசிய பந்து ஆர்யவீர் சேவாக்கின் முன்கையில் பலமாகத் தாக்கியது. கடுமையான வலியால் துடித்த அவருக்கு மைதானத்திலேயே மருத்துவர்கள் முதலுதவி அளித்து கைக்குக் கட்டுப் போட்டனர்.
இருப்பினும் களத்திலிருந்து வெளியேற மறுத்த ஆர்யவீர், அடுத்த பந்திலேயே அபாரமாக பவுண்டரி விளாசி தனது மன உறுதியை வெளிப்படுத்தினார். வலியுடன் விளையாடியபோதிலும் 50 பந்துகளில் அரைசதத்தைப் பூர்த்தி செய்த அவர், 2018-ஆம் ஆண்டு பெர்த் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பிறகு விராட் கோலி செய்ததைப் போன்று மட்டையை தூக்கி சைகை செய்து கொண்டாடினார்.
கேப்டன் லக்ஷயா ராய்சந்தானியுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்த ஆர்யவீர் சேவாக், 61 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர் நிகாப் ஷபீக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இத்தொடர் முழுவதுமே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்யவீர் சேவாக், முன்னதாக ஆட்டமிழக்காமல் 70, 160 மற்றும் 51 ரன்கள் எனத் தொடர்ந்து ரன் மழை பொழிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர் முழுவதும் நான்கு முறை ஐம்பதுக்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியதற்காக அவருக்குத் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.