Published : 01 Jun 2023 11:07 PM
Last Updated : 01 Jun 2023 11:07 PM
மும்பை: மகேந்திர சிங் தோனிக்கு மும்பை மருத்துவமனையில் இடது முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் தோனி இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்துடனேயே விளையாடி இருந்தார். விக்கெட் கீப்பிங் பணியை அவர் சிறப்பாக கையாண்ட போதிலும் பேட்டிங்கின் போது ரன்களை விரைவாக ஓடி எடுப்பதில் சில ஆட்டங்களில் சிரமங்களை சந்தித்தார்.
இந்நிலையில், தோனி தனது இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவைசிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுரை வழங்கினால் அதுதொடர்பான அறிக்கைகள் வந்த பிறகு முடிவு செய்யப்படும் எனவும் அதுவும் தோனிதான் அதை முடிவு செய்வார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தற்போது மும்பை மருத்துவமனையில் தோனிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளது.
சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தோனிக்கு அறுவை சிகிச்சை நடந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிடிஐக்கு பேசிய காசி விஸ்வநாதன், "ஆம், தோனிக்கு மும்பையில் உள்ள கோகிலா பென் மருத்துவமனையில் வெற்றிகரமாக முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காலையில் அறுவை சிகிச்சை நடந்தது, தற்போது நலமாக இருக்கிறார். அறுவை சிகிச்சையின் தன்மை உள்ளிட்ட மற்ற விவரங்கள் எனக்கு தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே நிர்வாகத்துக்கு நெருக்கமான வட்டாரத்தை சேர்ந்த நபர் பேசுகையில், "தோனி, ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அதன்பின் சில நாட்கள் ஓய்வில் இருப்பார். அறுவை சிகிச்சை முடிந்துள்ளதால் அடுத்த ஐபிஎல்லில் விளையாடுவதற்கான பிட்னெஸ் பெறுவதற்கு அவருக்கு போதுமான நேரம் கிடைக்கும் என நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT