Published : 01 Jun 2023 04:33 PM
Last Updated : 01 Jun 2023 04:33 PM

விராட் கோலியும், ரவி சாஸ்திரியும் செய்தது மிகப் பெரிய தவறு: அனில் கும்ப்ளே சாடல்

அம்பதி ராயுடு | கோப்புப் படம்

அம்பதி ராயுடுவை 4-ம் நிலைக்கென்றே தயார்படுத்திய பிறகு 2019 உலகக் கோப்பை அணியில் அவரைத் தேர்வு செய்யாமல் விட்டு விராட் கோலியும், ரவிசாஸ்திரியும் பெரிய தவறிழைத்து விட்டனர் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த அம்பதி ராயுடு சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்தார். இவரது ஐபிஎல் வாழ்க்கையில் 6-வது கோப்பையை வென்ற திருப்தியுடன் ராயுடு ஓய்வு பெற்றார். ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பு தனது பயணம் நிறைவு பெறுவதாக ராயுடு பிரியாவிடை கொடுத்தார். சிஎஸ்கே ஐபிஎல் 2023 கோப்பையை வென்று ராயுடுவுக்கு ஒரு அருமையான பிரியாவிடை பரிசை அளித்தது.

அம்பதி ராயுடு 55 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 1694 ரன்களை 47.05 என்ற அருமையான சராசரியை எடுத்துள்ளார். 3 சதங்களையும் 10 அரைசதங்களையும் கூட எடுத்துள்ளார் ராயுடு. அவரது ஸ்ட்ரைக் ரேட் 79.04, கொஞ்சம் கூடுதல் வாய்ப்பு கொடுத்திருந்தால் ஸ்ட்ரைக் ரேட்டை இன்னும் அதிகப்படுத்தியிருப்பார். டி20 மொத்த கரியரில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 125 என்பது அவரது டவுன் ஆர்டருக்குக் குறைந்ததல்ல.

பிப்ரவரி 3, 2019- அம்பதி ராயுடு வெலிங்டனில் நடந்த 5வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக 90 ரன்களை விளாசினார். அதில் 8 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடங்கும். அந்தப் போட்டியில் இவர் ஸ்ட்ரைக் ரேட் 80, மாறாக விஜய் சங்கரின் ஸ்ட்ரைக் ரேட் 70 தான். இவருக்கு கேதார் ஜாதவ்வே பரவாயில்லை என்பது போல் இதே போட்டியில் கேதார் ஜாதவ் தான் எடுத்த 34 ரன்களை 45 பந்துகளில் எடுத்து ஸ்ட்ரைக் ரேட்டை 75 ஆக வைத்திருந்தார். ஹர்திக் பாண்டியாதான் டாப். 22 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 45 ரன்களை அடித்து நொறுக்கினார்.

இந்திய அணி 252 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து 217 ரன்களுக்குச் சுருண்டு தொடரையும் 4-1 என்று இந்தியா வென்றது. ஆனால் அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராயுடு 13, 18, 2 என்று சொதப்பவே அவரது இடம் கேள்விக்குறியானது.

ஆனால் ராயுடுவை ஒதுக்கி விட்டு விஜய் சங்கரைத் தேர்வு செய்து விட்டு அவரை முப்பரிமாண வீரர் 3டி வீரர் என்று கூறினார் தேர்வாளர் எம்.எஸ்.கே. பிரசாத். இதை சூசகமாகக் கேலி செய்த ராயுடு, நான் இந்த உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யாதது நல்லதாகப் போய் விட்டது, நான் 3டி கண்ணாடி அணிந்து கொண்டு போட்டியை பார்க்கலாமே என்று செமயாக கிண்டலடித்தார். இந்நிலையில் விராட் கோலி கேப்டனாக இருந்த போது பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே முதல் முறையாக கோலி-ரவிசாஸ்திரி கூட்டணியின் தவறு குறித்து மவுனம் கலைத்துள்ளார்:

“2019 உலகக்கோப்பையில் அம்பதி ராயுடு ஆடியிருக்க வேண்டும். ஆம்! நிச்சயமாக! இதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அவரைத் தேர்வு செய்யாதது, ஒதுக்கியது மாபெரும் தவறு. நீண்ட காலமாக அவரை உலகக்கோப்பையில் 4ம் நிலைக்காக அவரை ஒருநாள் போட்டிகளில் தயார் செய்து விட்டு அவர் பெயரைப் பார்த்தால் காணவில்லை. இது மிகவும் ஆச்சரியம்தான்!” என்று ஜியோ சினிமாவில் அனில் கும்ப்ளே கருத்து கூறியுள்ளார்.

ராயுடுவின் கிரிக்கெட் வாழ்க்கை இது மட்டுமல்லாது பல கசப்பான நிகழ்வுகளை உள்ளடக்கியது என்பது வேறொரு கதை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x